பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தந்தை பெரியார் சிந்தனைகள்



குருதிக்குழுப்பொருத்தம், அழகு, பண்பு, படிப்புப் பொருத்தம் முதலியவற்றை எவன் பார்க்கின்றான்? இன்றைக்கு இப்படிப்பட்ட முட்டாள்தனமான பொருத்தம் படித்தவன்-பணக்காரன் இடத்தில்தான் குடிகொண்டுள்ளது.

நாகம்மையின் மூடப்பழக்கத்தைக் களைதல்: இரண்டு நிகழ்ச்சிகளை ஈண்டுக் காட்டுவேன்.

(1) விரத ஒழிப்பு: இராமசாமியாரைப்போல் நாகம்மையாரையும் ஆசாரமில்லாதவராக விடக்கூடாது என்பது மாமனார்-மாமியார் கருத்து. கணவருக்கு வேண்டிய புலால் உணவைத் தன்னிச்சையாகச் சமைப்பார். பரிமாறுவார். பிறகு நீராடி விட்டுதான் சமையல் அறைக்குள் போவார். கணவர் வெளியில் அமர்ந்துதான் உணவு உண்ண வேண்டும். சமையல் அறைக்குள் எப்போதும் நுழையக்கூடாது.

நாகம்மையார் வெள்ளிக்கிழமைதோறும் நோன்பிருந்து வந்தார். இது மாமியார் இட்டகட்டளை. மக்கட்பேறு இல்லை என்பதற்காகவே இந்த நோன்பு ஏற்பாடு. என்றைக்கு விரத நாளோ அன்றுதான் தவறாமல் இராமசாமியாருக்குப் புலால் உணவு சமைக்கவேண்டும். நாகம்மாள்தான் பரிமாற வேண்டும். இஃது இராமசாமியாரின் பிடிவாதம். நாகம்மையாரும் கணவன் முகம் கோணாமல் அவர் விருப்புப்படி புலால் உணவு சமைப்பார். பரிமாறுவார். உடனே நீராடச் சென்றுவிடுவார்.

இச்சமயத்தில் இராமசாமியார் சமையலறைக்குள் புகுந்து அம்மையார் அருந்துவதற்கெனத் தனியாக மூடிவைத்திருக்கும் விரதச் சோற்றைத் திறந்து அதற்குள் எலும்புத்துண்டைப் புதைத்துவிட்டுப் போய்விடுவார். அம்மையார் சாப்பிடும்போது சோற்றுக்குள்ளிருந்த எலும்புத்துண்டு தலைநீட்டும். இது கணவரின் திருவிளையாடல் என்பதை அவர் உணர்ந்து கொளவார். அவ்வளவுதான்; நோன்புக்கு முற்றுப்புள்ளி. அம்மை யார் பட்டினி. இக்குறும்புத்தனம் ஈ.வெ.ரா பெற்றோர்கட்கு தெரிந்தது. அவர்களும் கண்டித்தனர். ஆயினும் நிற்கவில்லை. இறுதியில் மாமியார் மருமகளை அழைத்து ‘இந்தக் கணவனைக் கட்டிக்கொண்டு நீ வாழ்ந்தது போதும். நிறுத்திவிடு ’ என்று சொல்லிவிட்டார். இவ்வளவோடு நாகம்மையாரின் வெள்ளிக் கிழமை விரதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் பெற்றது. மற்ற விரதங்களும் நாளடைவில் பறந்தன. இந்த நிகழ்ச்சியை கவிஞர் நாச்சியப்பன்,