சுந்தர சண்முகனார்
13
இவர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் ஆய்வு நூல்களாக இருந்தாலும் இவருடைய சிறப்பு எல்லா நூல்களையும் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய தமிழ்நடையில் எழுதியதாகும். இவருடைய ஆறு நூல்களுக்குத் தமிழக மற்றும் நடுவண் அரசுகள் பரிசுகள் வழங்கியுள்ளன. இவருடைய பல நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக அமைக்கப் பெற்றன. எடுத்துக்காட்டாக இவருடைய மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ் அகராதிக் கலை என்னும் நூல் சென்னை, மதுரை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் வித்துவான் மற்றும் முதுகலை வகுப்புகளுக்கும் புலவர் வகுப்புக்கும் பாடமாக அமைந்தது.
இவருடைய பண்பு நலன்களாக நேர்மை, வாய்மை மற்றும் தனி மற்றும் பொது வாழ்வில் தூய்மை என்பவற்றைக் குறிப்பிடலாம். நாமார்க்கும் குடியல்லோம் என்று பெயரெடுத்த இவர் தன் மனத்தில் பட்டதைத் தயங்காமல் வெளிப் படுத்தியவர். எந்த நிலையிலும் தன் கொள்கையிலிருந்து பிறழாதவர். தனக்கு மரணமே இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார். உண்மை தான் இவருக்கு மரண மென்பதில்லை. இறவாப் புகழ் பெற்ற தன்னுடைய நூல்கள் மூலம் தமிழ் உள்ளளவும் இவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.
இவருக்கு இரண்டு மக்கட் செல்வங்கள். ஆண் ஒன்று (சு.ச. அறவணன்) பெண் ஒன்று (அங்கயற்கண்ணி). தன்னுடைய மக்கட்செல்வங்களுக்குப் போதுமான செல்வங்களைச் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இவர், தன்னுடைய செல்வமாகச் சேர்த்து வைத்துச் சென்றுள்ளது தன்னுடைய நூல்களை மட்டுமன்று, தன்மீது தீராப்பற்றுள்ள நூற்றுக்கணக்கான மாணாக்கர்களையும் தாம்.
சு. ச. அறவணன்