பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்

17



நீதி நெறிமுறையே நின்றுநாம் ஆராயின்
ஆதி முதல்மொழிநம் அருந்தமிழே அம்மானை
ஆதி முதல்மொழிநம் அருந்தமிழே யாமாகில்
ஓதி அனைவரும் உணர்ந்தனரோ அம்மானை
உணரும் பருவந்தான் உற்றதுகாண் அம்மானை (3)

கள்ளமில்தெ லுங்குதுளு கன்னடம லையாளமெனும்
பிள்ளைபல பெற்றவள்நம் பெருந்தமிழ்த்தாய் அம்மானை
பிள்ளைபல பெற்றவள்நம் பெருந்தமிழ்த்தா யாமாகில்
எள்ளுவண்ணம் ஆரியம்போல் இறக்கவில்லை யம்மானை
இறவாத இறைவன்நிகர் இன்தமிழ்த்தாய்க் கம்மானை (4)


நாளும்இந் நாட்டிற்கு நடுமொழியாய் நனிநின்று
ஆளும்வன் மைதமிழுக் கடுத்ததுகாண் அம்மானை
ஆளும்வன் மைதமிழுக் கடுத்ததுவே யாமாகில்
மீளுதலில் அடிமையில்முன் மேவியதேன் அம்மானை
மேவியது நம்தமிழர் மிரண்டதினால் அம்மானை (5)

கற்றார் களிப்பெய்தக் கவின்சிறந்த நயமீந்து
வற்றா வளமுடைத்து வண்தமிழ்காண் அம்மானை
வற்றா வளமுடைத்து வண்தமிழே யாமாகில்
பற்றார் பலகுறைகள் பகருவதேன் அம்மானை
பகரல் கடல்முதலாம் பகைவரினால் அம்மானை (6)


4-கிளைமொழிகளாகிய பல பிள்ளைகளைப் பெற்றும், தமிழ் இளமை குன்றவில்லை; பேச்சுவழக்கு இறந்த ஆரியம் போல் இறக்கவுமில்லை. ஆதலின் அது கடவுளை ஒத்தது.

6. கடற்பெருக்காலும், தமிழ்நாட்டில் குடிபுகுந்த பிறராலும் பல தமிழ்நூல்கள் அழிந்தன.