பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தனித்தமிழ்க் கிளர்ச்சிபழியில் சுப்பிரமணிய பாரதியார் பகர்ந்ததுபோல்
மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே யம்மானை
மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே என்பதற்கு
வழியுடன்ஓர் அகச்சான்று வகுத்துரைப்பாய் அம்மானை
தமிழ்என்றா லேயினிமை தானறிவாய் அம்மானை (7)

அயல்மொழியில் இல்லாத அரியதொரு ழம்முதலாம்
இயல்பொலியாம் எழுத்துக்கள் இன்தமிழ்க்குண்டம்மானை
இயல்பொலியாம் எழுத்துக்கள் இன்தமிழ்க்குண்டாமாயின்
முயல்வுறுஆ ரியஎழுத்தை மொழிவதெங்ஙன் அம்மானை
இயலினிய நம்தமிழ்க்கவ் இடியொலியேன் அம்மானை (8)

வயல்வளஞ்சேர் தென்னாட்டு வண்மொழியாம் தமிழினிலே
அயல்மொழிகட்கில்லாத அகப்பொருளுண் டம்மானை
அயல்மொழிகட்கில்லாத அகப்பொருளுண் டாமாயின்
மயல்மிக்க காமுகரோ மாண்தமிழர் அம்மானை
காமமில்லை அதுதெய்வக் காதல்காண் அம்மானை (9)

சாதலே வந்திடினும் சற்றும் சலியாநற்
காதலினும் இனியதுநம் கவின்தமிழே யம்மானை
காதலினும் இனியதுநம் கவின்தமிழே எனின் அதனை
ஓதல்நம் இளைஞர்க்கு உயர்வன்றோ அம்மானை
மணப்பதன்முன் தமிழ்நூலை மணக்கவேண்டும் அம்மானை (10)


7. அகச்சான்று உள்ளுக்குள்ளாய் உடன்பொருந்திய நற்சாட்சி. தமிழ் என்ற சொல்லுக்கே இனிமையென்பது நேர்பொருள்.

8. தமிழ், மனிதர் தோன்றிய முதற்காலத்தில் தோன்றியதாதலின் கடுமையில்லாத ழ முதலிய இனிய எழுத்துக்களுடன் தோன்றியது.

9. அகப்பொருள் காதலன் காதலிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வரையறுத்துக்கூறும் இலக்கணம், இவ்விலக்கணம் தமிழில்மட்டுமே உள்ளது.

10. இளைஞர்க்குத் தமிழ்க்காதலே இன்றியமையாதது (முக்கியம்).