உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தனித்தமிழ்க் கிளர்ச்சி



செந்தமிழ்த் தெய்வத்தைச் சிறந்தநம் முன்னோர்கள்
பைந்தமிழ்ப் பண்களால் பாடினர்காண் அம்மானை
பைந்தமிழ்ப் பண்களால் பாடினரே யாமாகில்
இன்தமிழில் இசையில்லை என்பதேன் அம்மானை
என்பவர் ஆராய்ச்சி யிலாதவரே யம்மானை (22)

ஒருகால் உரைத்தாலும் உவப்பளிக்கும் தமிழிசைகேட்(டு)
உருகாத உயிர்ப்பொருளே ஒன்றுமில்லை யம்மானை
உருகாத உயிர்ப்பொருளே ஒன்றுமில்லை எனிற்செவியால்
பருகாத வடமொழியில் பாடுவதேன் அம்மானை
பாடவிடும் தமிழரினிப் பழியடைவார் அம்மானை (23)

நாடகத் தமிழ்

நாடகத்தால் காமம் நனிபெருகும் என்றெண்ணி
நாடகத்தைச் சிலமூடர் நசுக்கினர்காண் அம்மானை
நாடகத்தைச் சிலமூடர் நசுக்கியதி னால்மனிதர்
வீடகத்தே காமத்தை வெறுத்தனரோ அம்மானை
வெறுக்கவில்லை நாடகம் ஓர் விழுச்செல்வம் அம்மானை. (24)

நாளெல்லாம் உழைத்துழைத்து நலியடையும் மாந்தர்க்கு
நீளும்சோர் வுநாடகத்தால் நீங்குங்காண் அம்மானை
நீளும்சோர் வுநீங்குமென்று படமுதல்வர் நெடுங்குப்பைக்
கூளமாம் நாடகங்கள் குவிக்கலாமோ அம்மானை
குவிப்பதினால் தமிழ்ப்பெருமை குன்றுதடி யம்மானை (25)


22. தமிழ்மொழி ஆராய்ச்சியில்லாதவரே தமிழில் இசையில்லை என்று உளறுவார்கள்.
23. கோயில்களில் வடமொழிப் பாடல்கட்கு மக்கள் உருக வில்லையாதலால், இனியாயினும் தமிழ்ப்பாடல்களாலேயே வழிபாடாற்றச் செய்யவேண்டும்.
24. நாடகத்தால் நாட்டில் காமம்முதலிய தீயஒழுக்கங்கள் பாவுமெனக் கருதிச் சிலர் நாடகத்தை அழித்ததால் தமிழ்நாடகம் குறைந்தது.
25. திரைப்பட முதலாளிகள் சிலர் பயனற்ற கதைகளைப் பரப்புவதால் தமிழ் நாடகத்தின் பெருமை குன்றுகின்றது.