உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தனித்தமிழ்க் கிளர்ச்சி



திறத்தினில் மிக்கநம் திண்தமிழர் எஞ்ஞான்றும்
அறத்துறை மாறாத ஆன்றோர்காண் அம்மானை
அறத்துறை மாறாத ஆன்றோரென் றாலவர்கள்
மறத்துறை அறியாத மண்டுகளோ அம்மானை
புறப்பொருளில் அவர்தமது போர்மறங்காண் அம்மானை (30)

அடையும் எளியவர்கட்(கு) அகமகிழ்ந்தே கொடுக்கும்
கொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழர் அம்மானை
கொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழ ராமாயின்
படையின்றி அவர்பொருளைப் பறிக்கலாமே அம்மானை
பறித்துபறித்(து) அயலார்கள் பரவினர்காண் அம்மானை (31)

மருந்தா யினும்தமிழ் மக்கள் பிறர்க்களித்து
விருந்தோம்பும் வேளாண்மை விரும்புபவர் அம்மானை
விருந்தோம்பும் வேளாண்மை விரும்பிமிகச் செய்திடினே
வருந்திப்பின் வறுமையால் வாடாரோ அம்மானை
அவ்வருத்தம் அவர்கட்கோர் அணிகலமாம் அம்மானை (32)

பொன்னான நம்தமிழர், புல்லிய எண்ணமுடன்
இன்னாமை செய்தார்க்கும் இனிமை செய்தார் அம்மானை
இன்னாமை செய்தார்க்கும் இனிமை செய்தால்
துன்னும் பகைவரினால் துயர்விளையும் அம்மானை
துயர்விளைக்கும் பகைவரினித் துயருறுவார் அம்மானை (33)


30 - புறப்பொருள் என்றால், போர்மறம் முதலியவற்றைக்கூறும் இலக்கணம், இவ்விலக்கணத்தால் அமைந்த தமிழ் நூற்களில் தமிழரின் போர்த்திறத்தைக் காணலாம். போரென்றால் அறப்போராகும்.
32- பிறர்க்கு உதவியதால் உண்டான கேடு தமிழர்கட்கு ஓர் அணிகலமாகும்.
33 - பிறரை மன்னிப்பது தமிழர் நாகரிகம் என்றெண்ணி இனியும் தமிழர்க்குத் துயர்விளைப்போர் இயற்கையால் துயரடைவர்.