பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தனித்தமிழ்க் கிளர்ச்சி



இயற்கை வடிவுடைய இறைவனை முன்தமிழர்
இயற்கை முறைக்கேற்ப ஏத்தினர்காண் அம்மானை
இயற்கை முறைக்கேற்ப ஏத்தினரே யாமாகில்
செயற்கை முறைபலபின் செறிந்ததேன் அம்மானை
செறிந்தது வடவர்தம் சேர்க்கையால் அம்மானை (38)

கோவில்

காண்டகு பல்வடிவாய்க் காட்சி யளிக்கின்ற
ஆண்டவனுக் கனைவருமே அருங்குழந்தை அம்மானை
ஆண்டவனுக் கனைவருமே அருங்குழந்தை எனிற்சிலரை
ஈண்டுகோயி லில்விடாமல் இழிப்பதேன் அம்மானை
விடாதவரே வெளியேற வேண்டுமினி அம்மானை (39)

ஆரியர்கள் ஆட்சிசெயும் அரியதமிழ்க் கோயிலெலாம்
சீரியநம் தமிழரைச் சேர்ந்தனவே அம்மானை
சீரியநம் தமிழரைச் சேர்ந்தனவே எனின்தமிழர்
கோரியதோர் உள்ளிடத்தைக் குறுகலமோ அம்மானை
குறுகியினித் தம்முரிமை கொள்ளவேண்டும் அம்மானை (40)

திருமணம்

காதலனும் காதலியும் கருத்தொன்றிக் கலந்ததமிழ்க்
காதல் மணமேயக் காலத்தில் அம்மானை
காதல் மணமேயக் காலத்தி லாமாயின்
ஈதல் கிழவனுக்கின் றேற்றதோ அம்மானை
சாதல் கிழமணத்தின் சாலவுநன் றம்மானை (41)


40 - கோயிலுக்குள் தமிழர்கள் புகுந்தாலும், குறிப்பிட்ட ஓரிடத்திற்குச் செல்லக்கூடாதாம். இனி இது முடியாது.
41 - காதலனும் காதலியும் கருத்தொருமித்த காதல் மணமே வேண்டற்பாலது.