சுந்தர சண்முகனார்
29
இசைமிக்க ஒருசேரன் இனியஒரு புலவர்க்கு
விசிறிதன் கைக்கொண்டு விசிறினன்காண் அம்மானை
விசிறிதன் கைக்கொண்டு விசிறியது மெய்யாகில்
விசிறிய காரணத்தை விளம்பிடுவாய் அம்மானை
காரணந்தான் தமிழறிந்த காதலே யம்மானை (49)
அயலார்
தமிழ்நாட்டில் தமிழ்ச்சோற்றைத் தகுதியுடன் மிகஉண்டு
தமிழுக்கே கேடுசெய்வோர் தங்கியுளார் அம்மானை
தமிழுக்கே கேடுசெய்து தங்கியுள்ள அவர்தம்மைத்
தமிழர்கள் தண்டிக்கத் தயங்குவதேன் அம்மானை
தயங்குவதற்குக் காரணம்நம் தண்ணளியே அம்மானை (50)
தடமொழியாம் நம்முடைய தமிழ்ப்போர்வை தாம்போர்த்தி
வடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றார் அம்மானை
வடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றா ரெனிலவர்கள்
படையின்றிச் சூழ்ச்சியால்நம் பதவிகொள்வார் அம்மானை
பதவிகொள இனிவிடின்நாம் பதராவோம் அம்மானை (51)
கடல்சூழும் இவ்வுலகில் கவினியநம் தமிழர்க்கு
உடல்பொருள் ஆவிகள் ஓண்தமிழே அம்மானை
உடல்பொருள் ஆவிகள் ஓண்டமிழே யாமாயின்
அடல்வேண்டும் தமிழை அழிப்பவரை அம்மானை
அடல்தவறாம் இனிஅவரே அழிந்திடுவார் அம்மானை (52)
49. பண்டு, மோசிகீரனார் என்னும் புலவர் வழிநடந்த களைப்பால் அரண்மனைக் கட்டில் ஒன்றில் அறியாது படுத்து உறங்கிவிட்டார். அவ்வரண்மனைக்குரிய சேர அரசன் புலவரைத் தண்டிக்காது, விசிறி கொண்டு விசிறினான். காரணம் தமிழ்ப்பற்றே.
50 - தண்ணளி - கருணை
51 - சிலர் தமிழை வளர்ப்பதுபோல் நடித்து மறைமுகமாக வடமொழியை வளர்க்கின்றனர். இத்தகைய சூழ்ச்சிக்கு இனியும் இடங்கொடுப்பின் நாம் பதவியற்றுப் பதராவோம்.