உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தனித்தமிழ்க் கிளர்ச்சி



தமிழ்நாட்டில் தமிழையே தாய்மொழியாக் கொண்டசில
தமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றார் அம்மானை
தமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றா ராமாயின்
தமிழ்க் குருதி அவர்க்கில்லாத் தன்மையேன் அம்மானை
குருதி வட நஞ்சுதீண்டக் குலைந்ததுகாண் அம்மானை (53)

இடையிற்பல் லாண்டுகளாய் இன்னலுற்ற தமிழரினி
வடவர்க்கு அடிமைசெயும் வகைகொள்ளார் அம்மானை
வடவர்க்கு அடிமைசெயும் வகைகொள்ளா ராமாயின்
வடவரோ டொன்றிநாம் வாழ்வதெங்ங்ன் அம்மானை
ஒன்றியே கேட்போம்நம் உரிமையினை அம்மானை (54)

கல்வி

திட்டின்றித் தமிழ்நாடு திகழவேண்டின் யாரும்
கட்டாயக் கல்விதனைக் கற்கவேண்டும் அம்மானை
கட்டாயக் கல்விதனைக் கற்பின் அனைவர்க்கும்
தட்டாமல் உயர்தொழிலைத் தருவாரோ அம்மானை
எத்தொழிலா யினும்யாரும் இயற்றவேண்டும் அம்மானை (55)


52- தமிழுக்குக் கேடு செய்பவர் தாமே இனி அழிவர். அறக்கடவுளே தண்டித்துவிடும்.
53 - முன்பு சில தமிழர்களே தமிழைத் தாழ்த்திப் பேசினர். வடமொழிப்பித்து என்னும் நஞ்சு தீண்டியதால் அவருடைய தமிழ்க்குருதி (இரத்தம்) குலைந்தது போலும்.
54 - தமிழர் இடையில் பல்லாண்டுகளாய்ப் பிறர்க்கு அடிமைப்பட்டு வருந்தின ராதலின் இனியும் அது முடியாது. தம்முரிமையைப் பெற்றுக்கொண்டு வட இந்தியரோடு ஒன்றிவாழலாம்.
55 - எல்லோரும் கட்டாயக் கல்விகற்றால் எல்லோர்க்கும் உயர் தொழில் (உத்தியோகம்) கிடைக்குமா? என்று கேட்கின்றனர் சிலர். கற்றாலும் சரியே, எவரும் எத்தொழிலையும் செய்யக் காத்திருக்க வேண்டும்.