உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

தன்னுடைய இருபத்தாறாவது அகவையிலே தனித்தமிழ்க் கிளர்ச்சி என்னும் இந்த அம்மானை நூலைப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய அணிந்துரை பெற்றுப் பேராசிரியர் சுந்தர சண்முகனார் அவர்கள் பைந்தமிழ்ப் பதிப்பகம் சார்பில் 1948 ஆம் ஆண்டு மாசித்திங்களில் வெளியிட்டார். சரியாக ஐம்பது ஆண்டுகள் கழித்து 1998 ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் இந்நூலின் மறுபதிப்பு வெளியிடப்படுகிறது.


இந்நூல் வெளியாவதற்கு இரண்டு தூண்டு கோல்கள் : ஒன்று, பேராசிரியரின் மாணாக்கர்கள் நடத்திய சுந்தர சண்முகனார் நினைவுக் கருத்தரங்கு நிகழ்ச்சி, மற்றொன்று பெருந்தகையாளர் புலவர் சு. இராமசாமி அவர்களின் தமிழ்ப்பற்று. 22.3.1998 அன்று நடந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் மூன்று நூல்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றுள் ஒன்று ஆசிரியர் மா. தன. அருணாசலம் அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட தனித்தமிழ்க்கிளர்ச்சி நூலாகும். இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த புலவர் சு. இராமசாமி அவர்கள் இந்நூலை ஏற்கனவே படித்து அதன் சிறப்பை உணர்ந்தவர். இந்நூலால் கவரப்பட்ட இவர் கருத்தரங்க முடிவில் இந்நூலை வெளியிடப் பொருளுதவி புரிவதாக மனமுவந்து கூறினார். அவ்வாறே அன்னாரின் பொருளுதவியுடன் இந்நூல் வெளியிடப்படுகிறது. கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்த நூலாசிரியரின் மாணாக்கர்களான சொல்லாய்வுச் செல்வர். சு. வேல்முருகன், பாட்டறிஞர். இலக்கியன், புலவர். திருவேங்கடம், பாவலர். ஆ. மு. தமிழ்வேந்தன் ஆகியோர்களுக்கும் நூலை வெளியிட்ட புலவர். சு. இராமசாமி அவர்கட்கும் புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.