பக்கம்:தன்னுணர்வு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவரின் Self Reliance என்னும் ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பே இந்நூல். சொல்லுக்குச் சொல், வரிக்குவரி இது மொழிபெயர்க்கப் பெறாமல், அதன் கருத்துகள் சிதைவுறாத வண்ணம் அழகிய தமிழில் எளிய வகையில் அமைந்த மொழிபெயர்ப்பு இது.

இதன் இன்றியமையாத சிறப்புநிலை கருதி, இதனை நானே விரும்பி மொழி பெயர்த்தேன். இக் கட்டுரை முன்பே சுத்தானந்த பாரதியார் முதலியோரால் சில மொழி பெயர்ப்புகளைக் கொண்டுள்ளது. அவை எனக்கு முழு அளவில் நிறைவு தரவில்லை. எனவே தான் இதனை இதன் மூலக் கருத்துகள் மங்கி மழுங்கிவிடாதபடி, நானே ஈடுபட்டுத் தமிழ் வடிவில் கொணர்ந்தேன். --

மனம் சோர்வற்றிருக்கும் பொழுது இதனை ஒருமுறை படித்தால் போதும். மனம் கிளர்ச்சியுற்று விடும்; வலிமை பெற்றுவிடும் அளவில்லா ஆற்றலைப் பெற்றுவிடும்.

இக் கட்டுரையின் ஆங்கிலத் தலைப்புக்குச் சரியான மொழிபெயர்ப்பு "தன்னம்பிக்கை" என்பதே. ஒருவன் தன்னம்பிக்கை பெறும்முன், தன்னுணர்வு பெறவேண்டும். தன்னுணர்வு பெற்ற ஒருவன்தான் தன்னம்பிக்கை கொள்ள முடியும். தன்னம்பிக்கைக்கு அடிப்படை தன்னுணர்வு என்பதாலேயே, இத் தலைப்பைத் தன்னுணர்வு என்று மாற்றினேன்.

சிற்சிலவிடங்களில், கருத்து விளக்கத்திற்காக, மூல நூலிலில்லாத உவமைகளையும் விளக்கங்க ளையும் இதில் நானே சேர்த்துள்ளேன். அவை கட்டுரையாசிரியரின் மூலக்கருத்துக்குத் துணை போகுமாறு அமைந்துள்ளனவே தவிர, அவற்றைத் திசைத்திருப்புமாறு அமையவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/10&oldid=1161914" இலிருந்து மீள்விக்கப்பட்டது