பக்கம்:தன்னுணர்வு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

பொருளைப் பார்க்கினும் உட்பொருளே மிகவும் உயர்ந்திருக்கும் அறிவாளியின் ஆழத்தினின்றெழுந்த அவ்வெண்ண அலைகள் மாந்த இனத்தையே அலைக்கழிக்க வல்லன. அவை உண்மை யாகவே இருக்கும். அவற்றை அறிதலும், மேற்கொள்ளுதலுமே பேரறிவாகும்

ஆனால் புலவர்களின் எண்ணங்களையும் மெய்யறிஞர் தம் சொற்களையும், நாம் நோக்குவதினும் மேலாக நம் உள்ளத்தே ஒரு நொடிப் பொழுது மின்வெட்டுப் போல் ஒளிரும் கருத்துக் கீற்றை, நாம் கண்கொட்டாது காத்து உணர்ந்து கொள்ளல் வேண்டும். அரிய நூல்களில் உள்ளன வெல்லாம் அவ்வாறு ஒரு போழ்து நம் உள்ளத் திரையில் மின்னியனவாகவே இருக்கும். ஆனால் நாம் அவற்றை முன்பு, நம்முடையவை என்பதற்காகப் புறக்கணித்து விட்டதை நாணத்துடன் ஒப்புக்கொள்ளல் வேண்டும்

நம்முடைய உள் எண்ணங்களை நாம் அறியவும், அறிந்து போற்றவும் நாம் பழகிக்கொள்வதுடன், அவற்றையே பிறர்பாலும் துணிந்து கூறவும் எழுதவும் வேண்டும். அவ்வாறின்றி வேறொருவன் எழுதிய கருத்துகளை நாம் எழுதும் நூலின் பக்கங்களில் கொட்டி நிரப்புவது எள்ளி நகைக்கத்தகும் தற்கொலை முயல்வே. இவ்வுலகெங்கும் பல்லாயிரங்கோடி வயல் வெளிகளிருப்பினும், நாம் நம் உடலுழைப்போடு உழுது, வித்துான்றி விளைவித்தாலொழிய, ஒரு சிறு நெல்மணியையும், நம்முடையதென்று கூறிக் கொள்ளல் சால்பாகாது. அச் செயற்கு நாம் வெட்கப் படவும் வேண்டும்

நமக்குள் தோன்றும் பொருளை, நாம் உள்ளது உள்ளபடியே கூறுவோமாகில், நம் சொல்லிலும், கருத்திலும் மிகுந்த உண்மையும், ஆழமும் மட்டுமின்றித் தகுதியும் செழுமையும் உறுதியாக விருக்கும். நீ, வலிமை மிக்கவன் என்ற தன்னம்பிக்கை எப்பொழுதும் உன் உள்ளத்தே இருக்க வேண்டும். உனக்கென இறைவன், உன் காலத்தில், உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கென்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/14&oldid=1162182" இலிருந்து மீள்விக்கப்பட்டது