பக்கம்:தன்னுணர்வு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

பிறரிடம் முன்னே ஒன்று சொல்லிவிட்டாய் என்பதற்காக நீ இப்போது வேறொன்றைச் சொல்ல அஞ்சாதே. உண்மையை எப்பொழுதும் போலியின்மேல் வீசியெறியலாம். முன்பின் முரணாகிவிடுமோ என்ற நினைவுப் பிணத்தை உன் உள்ளத்தால் கட்டி இழுத்துத் திரியாதே. முன்பு தவறென்று நீ சொன்னவை இப்பொழுது சரியென்று பட்டால் உடனே ஒப்புக்கொள். அவ்வப் பொழுது உன் உள்ளம் உண்மையறிவையே நாடிப் போகின்றது. அதை முன்னும் பின்னும் இழுத்துத் தொல்லையுறாதே. இன்றைய வரை உனக்குப் படுவனவற்றை நீ அழுத்தமாகக் கூறத் தயங்காதே. நாளைக்குத் தோன்றும் செய்திகளையும் நாளைக்கும் அதே அழுத்தத்துடன் சொல். உன்னைப் பொதுமக்கள் தூற்றுவார்கள் என்று நினையாதே. அது தானே உன் பெருமைக்கு உரைகல்

தன்னியல்பை எவராலும் மீறிவிடல் முடியாது. மனம் தூய்மையானது. அது வெளிப்படுத்தும், மறைவான சொற்றொடர்களை நீ படிக்கத் தொடங்கிவிட்டால் நீ அதை எப்படியிருந்து படித்தாலும் உனக்கு விளங்கும். ஒவ்வொருவரும் தமக்கு இயல்பான உள்ளத்தையே வெளியிடுகின்றனர். ஆனால் அதை அவர் அறிவதில்லை

இனிமேல் எதற்காகவும், யாரையும் தலைவணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவேண்டாம். எவ்வளவு தாழ்ந்த வேலையாயிருந்தாலும், அதையே உண்மையாகவும், உள்ளத்தின் முழு ஆற்றலொடும் செய்பவனே, மாந்தரினத்தின் மேன்மையை உணர்த்துபவன். பொய்க்கு எத்தனையோ உவமைகள் இருக்கலாம். உண்மையான ஆற்றலுக்கும், மெய்ம்மைக்கும் எதையும் உவமை காட்டமுடியாது. காலத்தையும் நாடுகளையும் ஒன்றுமில்லையென்று கருதும்படி வினையாற்றும் வல்லமையை ஒவ்வொருவரும் பெறல் வேண்டும். அத்தகைய வல்லமையுற்றவனே அறமாகவும், காலமாகவும், நாடாகவும், ஊழியாகவும் காட்சி தருகின்றான். ஒவ்வொருவனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/18&oldid=1162187" இலிருந்து மீள்விக்கப்பட்டது