பக்கம்:தன்னுணர்வு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11

நேற்றிருந்த எண்ணங்களைக் கடந்து இன்றிருக்கின்ற எண்ணங்கட்கு நாம் வளர்ந்திருக்கிறோம். மேலும் நாம் நாளைக்கிருக்கின்ற எண்ணங்களை நோக்கி நடையிட வேண்டும். இவ்வாறின்றி நேற்றிருந்த எண்ணத்தையும், அதற்கு முன்பிருந்த வரலாற்றுக்காரர்தம் எண்ணங்களையும் எண்ணிக்கொண்டு நாம் கடந்த காலத்திற்கு நழுவுவது, நம்மை நாம் இழிவுபடுத்திக் கொள்வதாகும்; நம் கால்களை வெட்டிக் கொள்வதாகும்; நம் பார்வைகளைச் சுருக்கிக் கொள்வதாகும். மலையின் அடிவாரத்தினின்று உச்சி நோக்கிப் போகவே நமக்குக் கால்களும், கைகளும், கண்க ளும் வேண்டும். அங்கிருந்து கீழ்வர அவை தேவையில்லை. கால் கைகளை மடக்கிக் கொண்டு, கண்களை நன்றாக இறுக்கி மூடிக்கொண்டு உருள வேண்டியதுதானே?

நாம் எண்ணுவது என்று ஒன்றும் இல்லை. நாம் சொல்வது என்றும் ஒன்றில்லை. நமக்குள் ஊடுருவி நடந்து கொண்டிருக்கும் பேராற்றலின் அலைகளே அவை. அதனை மடக்கி அடக்கிவிட்டு நாம் நம்மைத் தாறுமாறாக ஒட்டிக் கொண்டு போவதில் நம் வாழ்க்கை வெற்றியடைந்த தென்று கூற முடியுமா?

எவரும் காலடி வைக்காத புது நிலப் பகுதியிலேயே நம் காலடிகள் பதியவேண்டும். நம் முன்னோர்கள் நடந்து குழப்பிய சேற்றையே நாமும் குழப்பத்தான் வேண்டுமா? அவர்தம்மைவிட ஆற்றலொடும், விரைவொடும் நம்மை நாம் செலுத்திக்கொண்டு போகவேண்டும்

ஒருவன் தன் முயற்சியை நிறுத்திக் கொள்ளுங்கால் அவன் ஆற்றலெல்லாம் அவனை விட்டுப் போய்விடுகின்றது. தன் ஆற்றலை முற்றிலும் வெளிப்படுத்துபவனையே, இருக்கின்றான் என்று கூறமுடியும். தன் உள்ளத்தில் எழும் அரிய ஆற்றலைப்பற்றி அறியாதவனையோ, குறைவாக அறிந்த ஒருவனையோ, தன் ஆற்றலை அறிந்து அதன் வழி நடக்கின்றவன் எளிதாக அடக்கி விடுகின்றான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/23&oldid=1162321" இலிருந்து மீள்விக்கப்பட்டது