பக்கம்:தன்னுணர்வு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22

யென்றும், ஒரு கள்வனிடமோ ஏமாற்றுக்காரனிடமோ அது சிக்கிவிடாமல், ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காகவே அது தன்னிடம் வந்து தங்கியிருக்கின்றது என்பதையும் நன்றாக உணர்கின்றான்

நம் ஆற்றல் கொண்டு நாம் தேடுவது, நம் உள்ளத்துள்ள மெய்ப்பொருள்தான். நமக்கென்று காத்து வைக்கப் பெற்றுள்ள அழியாத பொருள்களும் அவையே. பிற வெளிப் பொருள்களைத் தேடி உங்கள் உள்ளங்களை நாறவிட்டு, உங்கள் மேனித் தசைகளையும் அழுகவிட்டு, உங்கள் குப்பாயங்களை மட்டும் தடித்த துணியினாலோ மெல்லிய பட்டுகளாலோ தைத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள்

உள்ளம் பேராற்றலின் இருக்கை, அஃது இறைவனின் படுக்கை. அதை விட்டுவிட்டுப் பிறிதோரிடத்தில் இன்பத்தையும் நலத்தையும் வறிதே தேடித் திரிவதால் தன்னுள்ளத்து வீற்றிருக்கும் அரிய ஆற்றல் குன்றிவிடுகின்றது என்றொருவன் அறிந்துகொண்டு, அவன் தன் அறிவையும் உள்ளதையுமே நம்பி நடப்பானாகில், அவன் வாழ்க்கை வளைவுக ளெல்லாம் நேராக்கப்பெறுகின்றன. தன்னை யறிந்தவுடன் அவன் நிற்கத் தொடங்குகின்றான்

செல்வம் என்று பொதுமக்களால் கூறப்படும் ஆரவாரப் பருப்பொருள்கள், சூதாடுபவர்களின் கைகளில் விழுவது போல ஒருகால் ஒருசேர வந்து விழும். மறுகால், அவரை விட்டு ஒருசேரப் போகும். (கூத்தாட்டவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளிந் தற்று- என்ற திருக்குறளை ஒர்க) இவற்றைத் துகள்களாக எண்ணு. உன் உள்ளத்தின் வளர்ச்சியும் தூய்மையுமே, உன் உண்மையான செல்வம். அவைதாம் உனக்கு அமைதியைத் தரும்; உன்னை வெற்றி அன்னையின் மடியில் கொண்டுபோய்க் கிடத்தும். உன்னை நீயே அறி; உன்னை நீயாகவே ஆக்கிக் கொள்!

(முற்றும்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/34&oldid=1162415" இலிருந்து மீள்விக்கப்பட்டது