பக்கம்:தன்னுணர்வு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் தூயதாக, மாசில்லாததாக இருக்க அதை நல்ல நிலைகளில் கொண்டு செலுத்துதல் நம் கடமை. உடல் நலத்துக்கு உடற்பயிற்சி தேவை போலவே, மனநலத்துக்கும் மனப்பயிற்சி தேவை. மனத்தை நல்லவற்றில் ஈடுபடுத்துவது அறிவு. அறிவு நல்லவறறில் ஈடுபடத் துணை நிற்பது மனம், இவ்வாறாக, மனம் அறிவையும், அறிவு மனத்தையும், ஒன்றையொன்று துணையாகப் பற்றிக் கொண்டுதான், அனைத்துச் செயல்களும் நடைபெறுகின்றன. மனமும் அறிவும் இரட்டைப் பிறவிகள் போன்றன. அவை ஒன்றையொன்று பிரிந்து இயங்குமானால் நம் செயல்கள் அனைத்துமே தாறுமாறாக இருக்கும். மனம் தழுவாத அறிவு கொடுமையானதாக இருக்கும். அறிவு தழுவாத மனம் இழிவானதாகப் போகும். மனமும் அறிவும் ஒன்றுக்கொன்று துணைமட்டுமன்று ஒன்றையொன்று வளர்க்கக் கூடியது; மேலோங்கச் செய்வது

மனம் உலகப் பொருள்களிடம் இணக்கத்தையும், அறிவு அவற்றின் விளக்கத்தையும் தரவல்லன. மனம் இயக்கம் உடையது; அறிவு நிலைப்பு உடையது. மனம் ஒன்றைப் பற்றிக் கொண்டால், அதனுடைய தொடர்பால் அங்கேயே சுழன்று, அதனையே இறுகப் பற்றிக்கொண்டு இயங்கும். அறிவு ஒன்றைப் பற்றிக் கொண்டால் அதுவும் அங்கேயே ஊன்றி அதனையே ஆராய்ந்துகொண்டிருக்கும். அந் நிலைகளில், மனத்தை அறிவும், அறிவை மனமும் தட்டியெழுப்பி விழிப்புறச் செய்து, மேலும் மேலும் தொடர்ந்து முன்னே செல்ல ஊக்கப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் உயிர் தன் வாழ்க்கைச் செலவையும் அதன் வழியாக வாழ்க்கைப் பயனையும் பெறமுடியும்

மனம் அறிவு இரண்டிலும் எது முந்தியது. எது பிந்தியது என்று கூறமுடியாது. இரண்டும் உயிரியக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/6&oldid=1161917" இலிருந்து மீள்விக்கப்பட்டது