பக்கம்:தன்னுணர்வு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துடன், ஒரே பொழுதில், ஒரே அளவில், ஒரே ஆற்றலொடு பற்றி, அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் துணையாகத் தொடர்ந்து வருகின்றன. ஐம்பொறிகள் வழி, மனமும் அறிவும் பெறுகின்ற உணர்வை, உயிர் துய்த்து, விளக்கமும் ஒளியும் பெறுகிறது. இம்முயற்சிக்கிடையில், உயிர்க்குக் கிடைக்கக் கூடிய ஊதியமும் இழப்பும், இன்பமும் துன்பமுமே!

மனமும் அறிவும் நல்லவற்றில் தோய்வதால் இன்பமும், தீயவற்றில் தோய்வதால் துன்பமும் பெறுகின்றன. நல்லவை தீயவை என்பது அது அதற்குப் பொருந்தியனவும், பொருந்தாதனவும் ஆகும். உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவற்றிற்குப் பொருந்தியன, பொருந்தாதன என்று சில உண்டு. உடலுக்கு வேண்டிய உணவு நிலைகளுங்கூட அப்படித்தாம். விலங்குகளுக்கு உணவாகக் கூடியவை சில நமக்குப் பொருந்தாத உணவாகப் போகலாம். அவ்வகை உணவை நாம் உண்கையில் நம் உடல் துன்புறலாம். அதுபோலவே விலங்கு நிலையில் உள்ள மனவுணர்வுக்குப் பொருந்திய சில உணர்வுகள், மாந்த நிலையில் உள்ள நமக்குப் பொருந்தாமல் போகலாம். அந் நிலையே துன்பம் எனப்பெறும். மாந்தநிலைக்குப் பொருந்திய உணர்வுகளை நாம் கடைப்பிடித்து ஒழுகும் பொழுது நமக்கு நேர்வது இன்ப நிலைகளாகவே இருக்கும்

மனமும் அறிவும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கும்படியாகவே நம் செயல்கள் இருத்தல் வேண்டும். அல்லாக்கால் நிலைகள் தட்டுத்தடுமாறிப் போகும். மனம் எப்பொழுதும் எந்தப் பொருளின் மேலும் சட்டென்று பாய்ந்து நிலை கொள்ளும் தன்மை உடையது; கவர்ச்சியான பொருள்களில் உடனே காந்தம் போல் பாயும் அங்காப்புக் கொண்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/7&oldid=1161898" இலிருந்து மீள்விக்கப்பட்டது