பக்கம்:தன்னுணர்வு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அது ஒன்றில் பற்றிய பின்னை, அந்நிலையினின்று அதைப் பெயர்த்தெடுப்பது மிகவும் கடினம். அக்கால் அறிவுணர்வால் அதனை மீட்டு நல்வழியில் திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.

சென்ற விடத்தான் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
(422)
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.
(116)
என்பார் திருவள்ளுவர்.

எனவே ஐம்பொறிகளின் நுட்பவுணர்வுகளையும் நல்லபடி தேர்ந்து, அவற்றை ஓர் ஊர்தி வலவன் போல் அறிவால் இயக்குதல் வேண்டும். இவ்வியக்க நிலையில் வல்லவனுக்கு உலக வாழ்க்கையில் உள்ள மேடுபள்ளங்களும், இண்டு இடுக்குகளும், சந்து சதுக்கங்களும் தெளிவாகப் புலப்பட்டு விளங்கும்

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
(27)

மனம், அறிவு இரண்டினது ஆளுமையிலும் மனத்தினது ஆட்சியே எல்லார்க்கும் மிகவும் வலியதாக உள்ளது. ஏனெனில், அது மென்மையானது; எளிதாக எந்தப் பொருளின் மேலும் அவாவுகின்றபடி அலைவுறும் தன்மையுடையது. அதனால் அறிவு நலம் மிகாத ஒருவனைவிட, மனநலம் வாயாத ஒருவனே விரைந்து அழிவுகளுக்கு உட்படுகின்றான். எந்தெந்தப் பொருளின்மேல் மனம் அவாவுதை, அதன்மேல் செல்லுவதைத் தடுத்துக் கொள்கின்றோமோ, அந்தந்தப் பொருளால் வரும் துன்பத்தைத் தவிர்த்துக் கொள்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/8&oldid=1161899" இலிருந்து மீள்விக்கப்பட்டது