பக்கம்:தன்னுணர்வு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (341)

எனவே, இத்தகைய மென்மையுடைய மனமே, அறிவுணர்வைவிடப் பேணிக் காக்கப்பெறும் தன்மை யுடையது. உள்ளம் தன் இயல்பான மென்மைத் தன்மையினின்று வலிவு பெறப் பெற, அதன் இயக்கம் சிறந்து விளங்கும். ஒருவன் அறிவுணர்வால் சிறந்து மேன்மையுறுவதைவிட, உள்ளத்தினால் சிறந்து பெருமையுறும் - நன்மைபெறும் - வாய்ப்பை அதிகமாக இவ்வுலகத்தில் பெறமுடியும். ஆகவே, ஒருவன் தன் வாழ்க்கையில் மிகுதியாகப் பேணிக் காத்துக் கொள்ளத்தக்கது தன் உள்ளமே. பொருளுடைமைகளைக் கூட ஒருவன் அதிகமாகப் பெறவோ பேணிக் கொள்ளவோ தேவையில்லை. உள்ள வலிமையே ஒருவனுக்கு யாண்டும் வேண்டுவது. அதன் இயக்க வலிமை போய்விட்டால் ஒருவன் இவ்வுலகத்தில் கோடை(ஆடி)க் காற்றால் அலைக்கப்படும் தூசு தும்புகளைப் போல் துன்புற வேண்டியதுதான். அதனால் தான் திருவள்ளுவப் பெருமானும்,

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் (592)

- என்று கூறுவார்.

இத் தன்னுணர்வு என்னும் சிறிய ஆனால் சிறந்த நூலுள் உள்ளத்தின் இயக்கநிலைகள், அதன் மெலிவு வலிவுகள் நன்கு எடுத்து விளக்கப் பெறுகின்றன. இவ் வுலகில் மாந்தனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தன் உள்ளவுணர்வுகளை எவ்வாறு பேணிக் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதை இந்நூலில் மிகவும் அழகுபெற எடுத்துக் கூறுகிறார். இதன் ஆசிரியர் எமர்சன் அவர்கள். எமர்சன் சிறந்த ஒரு மெய்யறிவறிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/9&oldid=1161915" இலிருந்து மீள்விக்கப்பட்டது