பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

5. சேதுபதிகள்

இவர் தொன்றுதொட்டே தமக்கியல்பாயுள்ள வீரச் செயலாலும் வில்-வாள் முதலாய படைத்தொழில் வலியாலுமே தம்முயிர் வாழ்தலிற் சிறந்த தமிழ்நாட்டு மறவர் குடியினராவர். “வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்” என்றார். அகநானூற்றினும். (35) இம்மறவரையே வில்லேருழவர், வாளுழவர், மழவர், வீரர் முதலிய பல பெயர்களாற் கூறுவர் முன்னோர். இவர் நிரைகவர்ந்து ஆறலைத் துக்குறைகொள்ளுங் கொடுந்தொழிலாற் றம்முயிரோம்பும் வெட்சி மறவர் எனவும், அவ்வெட்சி மறவரை முனையிற்சிதற வீழ்த்து அவராற் கவரப்பட்ட நிரைகளை மீட்டு ஆறலையர் மற்காத்துப் பிறருயிரோம்பு முகத்தாற் றம்முயிர் வாழுங் கரந்தைமறவர் எனவும் இரு திறத்தினராவர். இதனை “ஆபெயர்த்துத் தருதலும்” (பொ. புறத். 5.) என்னுந் தொல்காப்பியத்து நச்சினார்க் கினியருரையானும் “தணிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை, நுழைநுதிநெடுவேற் குறும்படை மழவர், முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த, வில்லேர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்” (35) என்னும் அகநானூற்றுரையானும் அறிந்து கொள்க.

வெட்சி மறவர்க்கு ஆறலைப்பார், கள்வர் முதலிய பெயர்களும் கரந்தை மறவர்க்கு வயவர், மீளியர் முதலிய பெயர்களும் நன்று பொருந்துவனவாகும். இவ்விருவகை மறவருள், சேதுபதிகள் தீதெலாங் கழுவுஞ் சேது நீராடப் போதுவார்யா வரையும் ஆறலைகள்வர் முதலியோராற் சிறிதும் இடர்ப்படாமற் காத்து அவர்கட்கு வேண்டுவன உதவுதலே தமக்குறு தொழிலாகக் கொண்ட சிறப்பாற்றம் பெருவலியானே பிறருயிரோம்புங் கரந்தை மறவரேயாவர்