பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

51

“கொங்கு மண்டிலத்து “இளங்கோவாகிய கோசர்” என்று கருதி மொழிந்தனர். அரும் பதவுரைகாரர் குறும்பு செலுத்துவார் என்றது, சிறிய அரண்களில் ஆட்சி செலுத்துவார் என்றவாறாம். அடியார்க்கு நல்லார் கொங்கு மண்டிலத்து இளங்கோவாகிய கோசர் என்றது, வேந்தர் வழியினராய்க் கொங்கில் வதிகின்ற கோசரைக் குறித்ததாகும். இவர் இங்ஙனங் கருதியது மேல் வரந்தருகாதையில் இவரைக் “குடகக் கொங்கர்” எனக் கூறியதுபற்றி யென்று துணியலாம். குடகக் கொங்கர் என்றவரைக் குடமலை நாட்டாராயிருந்து கொங்கிற் குடியேறி வதிகின்ற இளங்கோ வழியினராகிய கோசர் என இவர் கருதினராவர். இவர் கோசரை இளங்கோவாகிய கோசர் என்றது இவரைப் பற்றிச் சான்றோர் கூறிய பல்லிடங்களிலும் இளங்கோசர் என வருதல் பற்றியென்றுய்த்துணரலாகும். இதனுண்மை மேலாராயப்படுவதனால் நன்கு வெளியாகும்.

வரந்தருகாதையுள் ஆரிய மன்னர் முதலாகக் கயவாகு வேந்தனிறுதியாகக் கூறிய அரசர்களுக்கிடையே “குடகக் கொங்கர்” என இவரைக் கூறுதலான், இவரையும் அவர் அரசராகக் கருதியே இளங்கோவாகிய கோசராகவுரைத்தனரெனத் தெளியலாம். கோசரை இளங்கோவாகிய கோசர் என வழங்கியதில் ஓருண்மையுளதாகவே வேண்டும்.

செங்குட்டுவன் கண்ணகிக்குக் கொங்கிற் கோயில் எடுப்பித்தது அடியார்க்கு நலலார்க்கு உடன்பாடின்மையால், குடக் கொங்கர் என்பார் குடகப் புறத்து நின்று கொங்கிற் றங்கியுள்ளார் என்று இவர் கருதினார் ஆவர். இக்கருத்துக் கொங்கிளங் கோசர் என்னுந்தொடர்க்கு அவர் கூறியவுரையான் உய்த்துணரப்படுவது. குடகக் கொங்கர் என்பது கொங்கினின்று குடகடற் புறத்துக் குடியேறினாரை நன்கு குறிக்குமென்றுணர்க.