பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

லும் கொள்ளப்படும். மற்றும் ஈகை, வீரம், யாவும் புறம் எனப்படும்.

தமிழ் மக்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தனர். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பனவே அவை. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனவும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனவும், காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனவும் குறிக்கப் பெறும். ஆகையினால்தான் நிலவுலகை ‘நானிலம்’ என்ற பெயரால் தமிழ்ப் பெரியோர் குறித்துப் போந்தனர். பாலைக்குத் தனி நிலப்பகுப்புக் கிடையாது. குறிஞ்சியும் முல்லையும் கால வேற்றுமையால் மாறிச் சுரமாதலே பாலையெனக் கூறப்படுகின்றது. இந்நிலங்களில் நிலைபெற்ற பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூவகைப் படுத்தினர்.

முதற்பொருள் நிலம் காலம் என இருவகைப்படும். குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது கூதிர் காலமும் முன்பனிக் காலமும் ஆகும். சிறுபொழுது யாமம். கருப்பொருள் என்பது அந்தந்த நிலத்திற்குரிய தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலியன. குறிஞ்சிக்குரிய தெய்வம் முருகன். உயர்ந்தோர் பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி. தாழ்ந்தோர் குறவர், கானவர், குறத்தியர். பறவைகள், கிளி, மயில். விலங்கு, பன்றி, புலி, கரடி, யானை, சிங்கம். ஊர் சிறுகுடி, குறிச்சி. நீர், அருவிநீர், சுனைநீர். பூ, வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ, குவளைப்பூ, காந்தட்பூ. மரம் சந்தனம், தேக்கு, அகில், வேங்கை, திமிசு, அசோகம், நாகம், மூங்கில். உணவு மலைநெல், மூங்கிலரிசி, தினை, தேன், பழம். பறை, முருகியம், தொண்டகப்பறை. யாழ் குறிஞ்சி யாழ்.