பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

முன் காலத்தில் ஓராண்டு பயிரிட்ட இடத்தில், அடுத்த ஆண்டு பயிரிடுவதில்லை. எனவே தங்கள் பயிர்த் தொழிலுக்கு வேண்டிய புதிய புதிய நிலத்திற்காகக் காடுகளின் பெரும்பகுதியை அழித்து விட்டனர். தொட்டபெட்டா சிகரத்தின் செங்குத்தான சரிவுகள், பயிர்த் தொழிலுக்குப் பயன்படாத காரணத்தால் படகர்களின் அழிவு வேலையினின்றும் தப்பி, நிறைந்த காடுகளைப் பெற்றுப் பேரழகோடு விளங்குகின்றன.

தொட்டபெட்டாவிற்கு மேற்கில் உள்ள பகுதிகளில் படகர் வாழ்வதில்லை. படகர்கள் வாழாத இடத்தில் பயிர்த்தொழில் இல்லை என்று சொல்லலாம். அவ்விடங்களில் தோடர்கள் வாழும் சிறு குடிசைகள் தென்படும். எங்கு பார்த்தாலும் சிறிதும் பெரிதுமான பசுமையான குன்றுகள் தென்படும். அக் குன்றுகளில் பல வண்ணங்களையுடைய மலர்கள் பூத்துக் குலுங்கும். இக்குன்றுகளுக்கு நடுவில் நீரோடைகளும் சிற்றாறுகளும் ஓடி, இவைகளைத் தனித்தனியே பிரிக்கின்றன. அவ்வோடைகளை அடுத்தாற்போல் புற்றரைகள், பரந்த இளமரக்காடுகள் நிறைந்திருக்கும். இக்காடுகளை 'ஷோலா' (Shola) என்று அழைப்பர். இடையிடையே மேலை நாட்டினருக்குச் சொந்தமான பூங்காக்கள் தென்படுகின்றன. அப்பூங்காக்களில் பசுமையான இலைகளுக்கு நடுவில் பெரிதாக மலர்ந்திருக்கும் செந்நிற ரோஜா மலர்கள் தம் தலையை அசைத்துச் சிரிக்கும்.

தொட்டபெட்டாவன்றி நீலகிரி மலையில் வேறு பல சிகரங்களும் உள்ளன. பனிவீழ் சிகரம் (Snowdown 8,299'), கிளப் சிகரம் {Club Hill 8,030'), எல்க் சிகரம் {Elk Hill 80,90'), தேவஷோலா சிகரம் (The devine wood Hill 7,417') குலக்கம்பை சிகரம் (5,601') கூனூர்பெட்டா சிகரம் (6,894'), ரல்லியா சிகரம் (Rallia Hill 7,325') திம்மட்டி சிகரம் (6,903'), எகுபா சிகரம் (Hecuba Hill 7793'), கட்டக்காடு சிகரம்

கு.வ.--7