பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

காடுகள் (Sholas), (2) எரி பொருளுக்காகவே ஆஸ்திரேலிய மரங்களை வளர்க்கும் செயற்கைக் காடுகள், (3) வட சரிவிலும் மோயாற்றுப் பள்ளத்தாக்கிலும் உள்ள அழிக்கப்படும் காடுகள் (decidous forests), (4) வய நாட்டிலுள்ள அடர்ந்த காடுகள்.

முதல் வகையைச் சார்ந்த பசுமை மாறாக் காடுகள் நீலகிரியின் உச்சியிலுள்ள பீடபூமிகளில் உள்ளன, பொருளாதாரக் கண்கொண்டு பார்க்கும்போது இக் காடுகளெல்லாம் பயனற்றவை. இக் காடுகளில் வளரும் மரங்களெல்லாம் மெதுவாக வளரக் கூடியவை. இம் மரங்கள் முழு வளர்ச்சியடைய ஒரு நூற்றாண்டு செல்லும். மேலும் இவைகளினின்றும் வெட்டி எடுக்கப்படும் விட்டங்கள் (timber) மிகச் சிறியவை; விலைமதிப்பற்றவை. இயற்கை அழகுக்கும், மலையில் நீர் வற்றாமலிருப்பதற்கும் இக் காடுகள் பயன்படுகின்றன.

கரு மரம் (black wood), தீதர், பைன் முதலிய மரங்கள் ஆஸ்திரேலிய இனத்தைச் சார்ந்தவை. இம் மரங்கள் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளிலேயே விரைவாக வளர்ந்து முழு வளர்ச்சியடையக் கூடியவை. இம் மரங்கள் அளிக்கும் விட்டங்கள் உறுதியானவை ; பயன் மிக்கவை; விலை மதிப்புடையவை. இவை நம் நாட்டின் நிறைந்த எரிபொருள் தேவையையும் நிறைவு செய்கின்றன.

பின்னிரு வகைக் காடுகளில் சுமார் முப்பத்தைந்து வகையான பயனுள்ள மரங்கள் அடர்ந்து வளர்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிடத்தக்கவை வெள்ளை சிதார், சாடின்வுட், பூவா, வேங்கை, ஆச்சா, இருள், கருங்காலி, மட்டி, வெண் தேக்கு, தேக்கு, நெல்லி, சந்தனம் என்பவை.