பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

பண் குறிஞ்சிப்பண். தொழில் வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைகாத்தல், கிளிகடிதல், தேனழித் தெடுத்தல், கிழங்கு கிண்டியெடுத்தல், அருவி நீராடல் முதலியன.

குறிஞ்சிக்குரிய உரிப்பொருள்கள், புணர்தலும், புணர்தல் நிமித்தமும் ஆகும். இயற்கைப் புணர்ச்சி யும் இடந்தலைப்பாடும், பாங்கற் கூட்டமும், பாங்கியிற் கூட்டமும், இரவுக் குறிக்கண் எதிர்ப்பாடும், பகற் குறிக்கண் எதிர்ப்பாடும் புணர்தல் என்று கூறப்படும், தலைவன் தோழியைக் குறையுறும் பகுதியும், அப்போது தோழி கூறுவனவும், குறை நேர்தலும், மறுத்தலும் புணர்தல் நிமித்தமாகும்.

குறிஞ்சி என்ற இப்பெயர் அந்நிலத்தில் பூக்கும் மலர்பற்றி வந்ததாகும். குறிஞ்சிப்பூ நம் நாட்டில் மிகவும் அருகிக் காணப்படுகிறது. இது பல்லாண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும் தன்மையது. அழகும் மணமும் மிக்கது. இது மலரும் காலத்தை முன்கூட்டியே அறிந்து மேலை நாட்டினரும், நம் நாட்டில் ஆர்வமுள்ள பலரும் அது பூக்கும் இடத்தில் சென்று கூடுகின்றனர். இறுதியாக 1959-ஆம் ஆண்டு, குறிஞ்சி மலர் கோடைக்கானலில் பூத்தது. இச்செய்தியைப் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தின.

நானிலங்களில் குறிஞ்சியே சிறந்தது; வற்றாத வளப்பமுடையது. அதனால்தான் வைப்பு முறையில் குறிஞ்சியை முதலில் வைத்துக் கூறினர் இலக்கண நூலார். மற்ற நிலங்களில் வாழும் மக்களைப்போல் குறிஞ்சி நில மக்கள் உழைக்க வேண்டியதில்லை. இவர்களது வாழ்க்கைக்குப் போதுமான வளம் இயற்கையாகவே மண்டிக் கிடக்கிறது. எப்பொழுதும் இடையறாத மழை பெய்து கொண்டிருப்பதால், நீர் வளத்திற்கு இங்கு குறைவில்லை. எங்கு பார்த்தாலும் அருவி