பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

உடம்பில் பட்டுப்போலக் கருமையான மயிர் நிறைந்திருக்கும். முகமும் கழுத்தும் செந்நிறமாக இருக்கும். பழத் தோட்டங்களுக்கு இதனால் பெருங்கேடு விளைவதுண்டு. ஆகையினால் அநுமாரின் அவதாரம் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல், இவற்றைச் சுட்டுக் கொன்று விடுகின்றனர்.

'சிங்கவால் குரங்கு' என்ற ஓர் இனம் இங்கு உண்டு. இது மேற்குப் பக்கத்துப் பீடபூமிகளில் காணப்படுகிறது. இதன் உடலில் கருமயிர் நிறைந்திருக்கும்: இதனுடைய முகத்தைச் சுற்றி வெண்மை கலந்த செம்மயிர் வட்டமாக முளைத்திருக்கும், சிங்கத்திற்கு இருப்பதைப்போல் இதன் வால் நுனியில் மயிர் குஞ்சமாக முளைத்திருக்கும்.

வேறு சில விலங்கினங்கள் :

கிழக்கிலுள்ள தாழ்ந்த சரிவுகளில் மூன்று வகையான வௌவால்கள் காணப்படுகின்றன. சிறுத்தைப் பூனை, காட்டுப் பூனை, மரப் பூனை (palm civet) எனப் பல வகையான பூனைகள் இங்கு நிறைய இருக்கின்றன. வரிக்கழுத்துக்கீரி, செங்கீரி, பழுப்புக் கீரி என மூன்று விதமான கீரிகள் இங்குக் காணப்படுகின்றன. மேற்குச் சரிவில் தாழ்வாக உள்ள காடுகளில் 'பறக்கும் அணில்' என்ற ஒருவகை அணில் இனம் உண்டு. இதோடு ஏழு விதமான அணில்கள் நீலகிரிக் காடுகளில் காணப்படுகின்றன. இவை ஈழம், ஜாவா முதலிய நாடுகளில் காணப்படும் இனங்களைச் சாந்தவை.

இங்குப் பலவகை எலிகள் காணப்படுகின்றன. புள்ளிகளையுடைய எலி இனம் ஒன்று இங்கு உள்ளது. இவ்வெலிகள் வயல்களுக்கு அடியில் நிலத்தைக் குடைந்து பயிர்களின் வேரைக் கடித்து நாசம் செய்து விடுகின்றன. காஃபிச் செடியின் கிளைகளில் ஏறிப் பூக்களைத் தின்று விடுகின்றன.