பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

அவரை, வெள்ளரி, சிலெரி என்பவை படகர்களால் நிறையப் பயிரிடப்பட்டு நகரங்களுக்கு அனுப்பப் படுகின்றன. ஆனால் சமவெளியான பெங்களூரிலிருக்கும் தோட்ட முதலாளிகளோடு, வாணிபத் துறையில் இவர்களால் போட்டியிட முடியவில்லை. மலை மீது இவைகள் விளைவதால் சமவெளியிலுள்ள நகரங்களுக்குக் கொண்டு செல்ல நிறையப் பொருட் செலவு ஏற்படுகிறது.

நெல் நீலகிரி மலையின் ஒரு பகுதியான வயனாட்டில் கொல்லி மலையைப் போன்று நெல் பயிரிடப்படுகிறது. அதோடு சாமையும் இராகியும் உயர்ந்த மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகின்றன. நெல் தாழ்வான பீட பூமிகளில் பயிரிடப்படுகிறது. மலையிலிருந்து ஓடி வரும் அருவிகள் நெல் வயல்களில் பாய்கின்றன.

வணிகப் பயிர்கள் (Commercial Crops)

நீலகிரி மலையில் பயிர்த்தொழில் செய்யப்படும் மொத்த நிலப்பரப்பில் 36% காஃபித் தோட்டங்கள். தேயிலைத் தோட்டம் 10-6%. சின்கோனா 4-6%. உணவுத் தானியங்களும், பழத்தோட்டங்களும், காய்கறித் தோட்டங்களும் மீதி நிலத்தில் உள்ளன.

காஃபி

உலகில் விளையும் மொத்தக் காஃபியில் ¾ பங்கு பிரேசில் நாட்டில் விளைகிறது. மீதிக் கால் பங்கு ஜாவாவிலும், தென்னிந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் விளைகிறது. தென்னிந்தியாவில் விளையும் காஃபி, உலகில் விளையும் மொத்தக் காஃபியில் 1 பங்குதான். தென்னிந்தியாவின் மொத்த விளைச்சலில் பாதிப்பங்கு மைசூர் மலைகளிலும், மறுபாதி சென்னை , குடகு, திருவாங்கூர் மாநிலங்களிலும் பயிராகின்றன.

கு.வ.—8