பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114


1795- ஆம் ஆண்டு கொலோனல் ரீட் என்ற பெயர் கொண்ட சேலம் மாவட்டத் தண்டலர், திருப்பத்தூரில் காஃபி பயிரிட்டுச் சோதனை நிகழ்த்தினார். ஆனால் அம் முயற்சி வெற்றியளிக்கவில்லை. டாக்டர் புச்சானன் என்பவர் கி. பி. 1801-ஆம் ஆண்டு தெல்லிச்சேரியில் காஃபிப் பயிர் நன்றாக விளைவதைக் கண்டார். கி. பி. 1828-இல் பிரௌன் என்பவர் அஞ்சரிகண்டியிலிருந்து காஃபிப் பயிர்களைக் கொண்டுவந்து மலையாள நாட்டைச் சேர்ந்த வய நாட்டில் பயிரிட்டார். ஆனால் 1839-ஆம் ஆண்டு வரையில் அங்கு அப்பயிர்த்தொழில் சிறப்படையவில்லை. கூனூரில் வாழ்ந்த டாசன் என்ற ஐரோப்பியர் 1838-ஆம் ஆண்டு நீலகிரிப் பீடபூமியிலுள்ள காலகட்டி என்ற இடத்தில் காஃபிப் பயிர்களை நட்டுச் சோதனை நிகழ்த்தினார். அச்சோதனை ஓரளவு வெற்றிகரமாக முடிந்தது. உடனே அவுட்டர் லானிப் பள்ளத்தாக்கில் காஃபித் தோட்டங்கள் உருப்பெறத் தொடங்கின, கி. பி. 1866-67-ஆம் ஆண்டுகளில் அப்பள்ளத்தில் 13,500 ஏகர் நிலம் காஃபித் தோட்டமாக மாறியது. 35,000 ராத்தல் காஃபிக் கொட்டை அங்கிருந்து ஏற்றுமதியாயிற்று. நீலகிரி மலையின் கிழக்கு, தெற்கு, வடகிழக்குச் சரிவுகள் காஃபி விளைவதற்கு ஏற்ற இடங்களாக விளங்குகின்றன. இப்பொழுது நீலகிரி மலையிலுள்ள காஃபித் தோட்டங்களின் பரப்பு 50,000 ஏகருக்கு மேல் இருக்கும். உயர்ந்த ரகக் காஃபியான அரேபிகா தான் இங்கு விளைகிறது.

தேயிலை

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலையில் தென்னிந்தியாவின் பங்கு மிக மிகக் குறைவு. அதுவும் நீலகிரியில் விளையும் தேயிலையின் அளவு மொத்த இந்தியத் தேயிலையில் 1% தான். நீலகிரியிலுள்ள தோட்ட முதலாளிகள் முதன் முதலில் தேயிலையை விரும்பிப் பயிரிட்டதற்குச் சில காரணங்கள்