பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

பிறகு படிப்படியாகத் தேயிலைப் பயிர்த்தொழில் வளர்ந்து நல்ல நிலையடைந்தது. பயிரான தேயிலையை விற்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்யப்பட்டன. தற்போது, நீலகிரித் தேயிலை இங்கிலாந்து நாட்டிற்குப் பெரும் அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நீலகிரியில் விளையும் தேயிலை மூன்று வகைப்படும். அவையாவன (1) தூய்மையான சீனத் தேயிலை. இத் தேயிலை மிகவும் உறுதியானதாக இருக்கும் (2) அஸ்ஸாமில் பெரும் அளவு விளையும் நாட்டுத் தேயிலை. இது 25 அல்லது 30 அடி உயரம் வளரும் தன்மையுடையது. (3) சீன இனத்தையும், நாட்டு இனத்தையும் கலந்து உண்டாக்கப்பட்ட தேயிலை (Hybrid). இது சீனத் தேயிலையைப்போல் இருமடங்கு இலைகளைக் கொண்டிருப்பதோடு, அதன் உறுதியையும் பெற்றிருக்கிறது.

சின்கோனா

நீலகிரி மலையில் பயிரிடப்படும் சின்கோனா மரங்கள் முக்கியமாகக் கொய்னா மருந்து செய்வதற்கும் வேறுசில மருந்துகள் செய்வதற்கும் பயன்படுகின்றன. சின்கோனாவின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கொய்னா, மலேரியா நோய்க்கு அருமருந்தாக விளங்குகிறது. இப்போது உதகமண்டல வட்டத்தில் 4000 ஏகர் நிலத்தில் சின்கோனா பயிரிடப்படுகிறது. இத் தோட்டங்களில் பெரும்பகுதி அரசியலாருக்குச் சொந்தமானது. இதற்கென்று ஒரு தனி இலாகா (Chincona Department)வே அரசியலாரால் நடத்தப்படுகிறது. மிகவும் மலிவான விலையில் கொய்னாவைத் தயாரித்து நாட்டு மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே இவ்விலாகா வின் நோக்கம்.

சின்கோனா மரம் தென்னமெரிக்கக் காடுகளுக்கே உரித்தான பயிர், அங்கிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு இப்பயிர் பரவியது. இது உலகில் பரவுவதற்கு