பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

"சமவெளியில் வாழும் நாகரிக மக்களிடத்தில் காண முடியாத பல அரும் பண்புகளை நான் அவர்களிடம் காண்கிறேன். அப் பண்புகள் என்னுள்ளத்தைப் பெரிதும் கவர்கின்றன. 'பழங்குடி மக்கள் வெறியுணர்ச்சி மிக்கவர்கள் ; கொலைக்கஞ்சாக் கொடியவர்கள் ; சினங்கொண்ட பொழுது பிறர் சிரத்தைக் கொய்யச் சிறிதும் தயங்காதவர்கள்' என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் இச் செயல்கள் எல்லாம், சமவெளியில் வாழும் நாகரிக மனிதன் செய்யும் அக்கிரமங்களை விடக் கொடுமையில் குறைந்தவையே! பிறருடைய உள்ளத்தை ஏறி மிதித்து நசுக்குவதைவிடத் தலையை வெட்டுவது எவ்வளவோ மேல் என்று நான் கருதுகிறேன்.

"அவர்கள் ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டவர்கள். பாராளு மன்றமும் சட்ட சபையும் அவர்களுக்கு இல்லை. ஆனால் ஜனநாயகத்தை நம்மைவிட நல்ல முறையில் உணர்ந்தவர்கள். ஆடியும் பாடியும் வாழ்க்கையை இன்பத்தோடு வாழக் கற்றவர்கள். ஆனால் நாமோ, நாகரிகத்தின் உச்சியில் வீற்றிருப்பதாகப் பெருமை பேசிக்கொண்டு, பிறரை இழித்துரைப்பவர்கள் ; பிறர் ஆக்கங்கண்டு பொறாமைப்படுபவர்கள், இத்தகைய நாகரிகத்தையா நாம் பழங்குடி மக்களுக்கு அளிக்க வேண்டும்? ஒருவனை ஒருவன் இழித்துப் பேசுவதைக் கலையாகக் கொண்டு வாழும் நாகரிக சமுதாயத்தைவிட்டு விலகி, ஒரு பழங்குடி மகனாகக் காடுகளில் திரிவதைப் பெரிதும் விரும்புகிறேன்," என்று கூறியிருக்கிறார்.

பழங்குடி மக்களைப்பற்றி இரண்டு விதக் கொள்கைகள் உலகில் உலவுகின்றன. அவர்களைக் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கும் காட்சிப் பொருளாகவும், ஆராய்ச்சிக்குரிய கருப்பொருளாகவும் அப்படியே காடுகளில் விட்டுவைத்திருக்க வேண்டும்