பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7அப்பாடல் பின் வருமாறு :

“அவனுந்தான், ஏனல் இதனத்து அகிற்புகை உண்டு இயங்கும்
வான்.ஊர் மதியம் வரைசேரின், அவ்வரைத்
தேனின் இறால்என ஏணிஇழைத் திருக்கும்
கான்அகல் நாடன் மகன்.”

அருவி நீரின் வளத்தால் விளைந்த மலைநெல்லை அவர்கள் குற்றும் செய்தி இலக்கியத்தில் சுவைபடக் கூறப்பட்டுள்ளது. முற்றி மணம் வீசும் சந்தனமரத்தால் உரல் செய்வார்கள். முத்து உதிருமளவு முதிர்ச்சி பெற்று, நீண்டு வளர்ந்த யானையின் கொம்பை உலக்கையாகப் பயன்படுத்துவார்கள். முறம் போல் அகன்றிருக்கும் சேம்பின் இலையில் மலைநெல்லை வாரிக் கொண்டு வருவார்கள். அதை உரலில் கொட்டி மகளிர் இருவர் உலக்கையால் மாறி மாறிக் குற்றுவர். குற்றும் உழைப்பை மறப்பதற்காக இருவரும் இனிமையாகப் பாடுவர். அப்பாடல் கேட்பதற்கு இனிமையானது. அது வள்ளைப்பாட்டு எனப்படும். உலக கைப்பாட்டு, அகவினம் என்றும் அது கூறப்படும். அப்பாட்டைக் கேளுங்கள் :

“அகவினம் பாடுவாம் தோழி ! அமர்க்கண்
நகைமொழி நல்லவர் நாணும் நிலைபோல்
தகைகொண்ட ஏனலுள் தாழ்குரல் உரீஇ
முகைவளர் சாந்துரல் முத்தார் மருப்பின்
வகைசால் உலக்கை வயின்வயின் ஒச்சிப்
பகையில் நோய்செய்தான் பயமலை ஏத்தி
அகவினம் பாடுவாம் நாம்.”

இவ்வாறு குற்றிய அரிசியை உலையிட்டுச் சமைத்து விருந்தோடு உண்பர்.

மா, பலா, வாழை ஆகிய முக்கனியும் தமிழகத்து மலைகளில் செழித்து வளரும். அவ்வளம் கலித்தொகையில் மிக இனிமையாகக் கூறப்படுகிறது.