பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

ருக்கு அப் பரிசுப் பொருள்களை வழங்குவான். பிறகு சில நாள் அவர்கள் வீட்டிலேயே தங்கி, அப்பெண்ணோடு உளங்கலந்து பழகுவான். எந்தவிதக் கட்டுப்பாடும் அவர்களுக்குக் கிடையாது. கடைசியில் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி மனமொத்த காதல் கொண்டால் திருமணம் நடைபெறும். ஆனால் இம் முறை சில விபரீதமான முடிவுகளையும் கொண்டுவந்து விடுகிறது. சில இளைஞர்கள் இம்முறையைத் தங்கள் பொழுதுபோக்கிற்குரிய கருவியாகக் கருதத் தொடங்கினர். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப“ என்ற தொல்காப்பியச் சட்டம் இங்கும் அமுலாக்கப்படுகிறது. இவ்வழக்கம் சிறிது சிறிதாகத் தேய்ந்து வருகிறது. சட்ட வரம்பிற் குட்பட்ட திருமணம் மலர்கிறது.

திருமணம் எப்பொழுதும், மணமகன் இல்லத்திலேயே நடைபெறுகிறது. சடங்குகள் அதிகமாக ஒன்றும் இல்லை. மணப்பெண்ணைக் குடத்தில் நீர் கொண்டுவரச் சொல்லுவார்கள், அவ்வாறு செய்வதன் மூலம், அப்பெண் கணவன் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகப் பொருளாம். அச்சடங்கு முடிந்ததும் மணப்பெண், மாப்பிள்ளை வீட்டிலுள்ள எல்லாரையும் வணங்கவேண்டும். கோதர்களின் இசை முழங்க எல்லாருடைய முன்னிலையிலும் பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலிகட்டுவான். பரிசப்பணம் மாப்பிள்ளை வீட்டாரின் சக்திக்குத் தகுந்தபடி கொடுக்கப்படும். 200 ரூபாய் வரையில் பரிசப்பணம் கொடுப்பதுண்டு. ‘கூறைப்பணம்' என்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்களிப்பது வழக்கம்.

மணவிலக்கு :

படகர்களிடையே மணவிலக்கு அதிகமாகக் காணப்படுகிறது. கணவன் வீட்டார் திருமணத்தின்போது கொடுத்த பரிசத்தொகையையும், கூறைப்பணத்தையும்

குவ—9