பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

தால் பல மாடிகளோடு அலங்காரமாகத் தேர் செய்வர். தேரைப் பொதுவாகத் துணிகளாலேயே அலங்கரிப்பர். பிணத்திற்குப் புத்தாடை அணிவித்துத் தேரில் கிடத்துவர். பிணத்தின் நெற்றியில் இரண்டு வெள்ளிப் பணங்களைப் பதித்து வைப்பர். இறந்தவனுடைய சுற்றத்தார்கள் பிணத்தைச் சுற்றி நின்று கூச்சலிட்டு அழுவார்கள். பிணத்திற்கு இறுதி வணக்கம் செலுத்துவார்கள். ஆண்களெல்லாம் அரைக்கை மேலுடையும், புதுமாதிரியான தலைப்பாகையும் அணிந்துகொண்டு கோதர்களின் இன்னிசைக் கேற்ப ஆடுவார்கள். எருமைக் கொம்பினால் அமைக்கப்பட்ட பிடியோடு கூடிய அரிவாள், சிறு கோடரி, புல்லாங்குழல், ஊன்று கோல் ஆகிய பொருள்களை ஆசாரி செய்து கொண்டு வந்து, பிணத்தினருகில் தேர் மீது வைப்பான். அடுத்த உலகில் அவனுக்குப் பயன்படுவதற்காக அக்கருவிகள் வைக்கப்படுகின்றனபோலும். சுடுகாட்டுக்குச் சென்றதும் தேரை அழித்துவிடுவர். இறந்தவன் மனைவி தன் நகைகளைக் கழற்றிப் பிணத்திற்கருகில் வைத்துவிட்டுத் திரும்புவாள். ஒரு முதியோன். இறந்தவன் தலையருகில் நின்று அவன் செய்த பாவங்களைப்பற்றி நீண்ட ஒரு பாட்டுப் பாடுவான். அப்பாட்டுப் பின்வருமாறு :

ஆண்டியின் சாவை அறையக் கேட்பீர்!
மாண்ட கன்றின் மாத்தலை யோடு
பூண்ட இவன்பவம் பூண்டோடு ஒழிக;
மண்திணி ஞால வாழ்வதை விட்டு
விண் தனில் வாழ விரைகிறான் தேரில்,
வையகத் தினிலவன் செய்தவை எல்லாம்
பாவம் பாவம் தீராப் பாவம்!
பெற்றோர் செய்த பெரும்பா வத்தையே
மற்றவர் தமக்கு முற்றவே செய்தான் ;
முன்னோர் செய்த முடிவில்பா வத்தையே
பின்னோன் இவனும் பேணியே செய்தான் ; இனத்தவர் செய்த இழிசெயல் எல்லாம்
மனத்தினில் கொண்டு மட்டின்றிச் செய்தான்; பொய்யும் வழுவும் கையக வைப்பு :