பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

போடுவதற்கென்று ஒவ்வோர் ஊரிலும் தோண்டப்பட்டுள்ள குழியில் போட்டுவிட்டுத் திரும்புவார்கள். உடையார் பிரிவினர் மட்டும், சமவெளியில் வாழும் லிங்காயத்தார்களைப்போல் உட்கார வைத்துப் புதைப்பர்.

சமய வாழ்வு :

படகர்கள் மிகவும் பழமை விரும்பிகள், இந்து சமயக் கொள்கைகளில் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள். சிவபெருமான்தான் அவர்களுக்குத் தலையாய கடவுள். மகாலிங்கசாமி, மாதேசுவரன், திருமால் முதலிய வேறு கடவுளர்களையும் அவர்கள் வணங்குவதுண்டு. மேட்டுப்பாளையத்திற்கருகில் அரங்கசாமி மலையிலுள்ள அரங்கசாமித் தெய்வத்தையும் அடிக்கடி சென்று வணங்குவார்கள். இவைகளன்றி வேறுபல சிறு தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இவர்களில் கரைராயனும், ஹேதி (ஹேதம்மா)யும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹேதம்மாளுக்குப் பல இடங்களில்கோயில்கள் எடுக்கப்பட்டுள்ளன. தன் கணவன் இறந்த பொழுது உடன்கட்டை ஏறி மாண்ட காரணத்தால், படகர்கள் இவளைப் பெருமதிப்போடு போற்றி வணங்குகின்றனர். ஹேதம்மா கோயிலுக்கு எதிரில் திருவிழாக்காலங்களில் 'தீமிதித்தல்' நடைபெறும். ஹேதம்மா வழிபாடும், ஒருவகைப் பத்தினி வழிபாடுதான். ஓங்காளியம்மன், துரோபதையம்மன், மாரியம்மன் ஆகிய பத்தினித் தெய்வங்களின் திருவிழாக்களில் 'தீமிதித்தல்' நடைபெறுவதைப் போன்றதே இதுவும். (ஆனால் தமிழகத்தின் வீர பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு விழா எடுப்பதை மட்டும் நாம் மறந்து விட்டோம்)

வேறு செய்திகள் :

நீலகிரி மலைமீது வாழும் மக்களில் மிகவும் முக்கியமானவர்கள் படகர்களே. இப்போது ஏறக்குறைய 50,000