பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

பேர் நீலகிரியில் வாழ்கின்றனர். இவர்களுடைய திருவிழாக்களில் கண்டு மகிழ்தற்குரிய சிறப்புவாய்ந்தது, அறுவடைக் காலங்களில் நடைபெறும் 'இரா விருந்து' (Fire feast) என்னும் விழாவாகும். நல்ல விளைச்சல் ஏற்பட வேண்டி, இறைவனைத் திருப்திப்படுத்துவதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. படகர்கள் இசைப்பிரியர்கள். அவர்கள் இசை தனித் தன்மை வாய்ந்தது. பலவித இன்னேசை பயப்பது. அவர்கள் இசை பண்பட்டதல்ல என்றாலும், தொலைவிலிருந்து கேட்போருக்கு, அவர்களுடைய செவ்வோடு போட்ட குடிசைகளும், அவற்றைச் சூழ்ந்துள்ள எழில்மிக்க காடுகளும், அக்காடுகளில் மலர்ந்துள்ள கண்ணைக் கவரும் வண்ண மலர்களும் நினைவில் தோன்றாமலிருக்க முடியாது.

படகர்கள் இப்போது பழங்குடி மக்களாகக் கருதப்படும் நிலையில் இல்லை. நாகரிக மக்களாக மாறிவருகின்றனர். மேலை நாட்டினரைப் போல் காலுறையும், மூடுசெருப்பும், கோட்டும், தொப்பியும் அணிந்து காட்சியளிக்கின்றனர். கல்வி வளர்ச்சியும் அவர்களிடம் காணப்படுகிறது. பெரிய தோட்ட முதலாளிகளாகவும், வணிகர்களாகவும் பலர் உள்ளனர். ஒவ்வொரு படகர் குடும்பத்துக்கும் குறைந்தது ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. உழவுக்காலம் தவிர மற்ற நாட்களில் கூலிகளாகப் பணிபுரிகின்றனர். பெரிய இலட்சாதிபதிகள் கூட ஒரு சிலர் இவர்களிடையே உள்ளனர். படகர்களிடமிருந்து நிலங்களை மற்றையோர் வாங்குவதை அரசாங்கம் சட்ட பூர்வமாகத் தடுத்திருக்கிறது. பழமையின் பிடிப்பிலிருந்தும், மூடப்பழக்க வழக்கங்களிலிருந்தும் இவர்கள் மீண்டு வருகின்றனர்.

தோடர் : நீலகிரி மலையில் வாழும் பழங்குடி மக்களில் மிகவும் தொன்மையானவர்கள் தோடர்களே. இவர்கள்