பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

இயற்கை எழில் மிக்க நாட்டுப்புற வாழ்வில் (Arcadian life) ஊறிப் போனவர்கள். மற்றைய மக்கள் கடைப்பிடித்தொழுகும். நாகரிகத்தை விரும்பாதவர்கள். எருமைக் கூட்டத்தைத் தவிர வேறு எதையும் செல்வமாகக் கருதாத மேய்ச்சல்காரர்கள். உலகப் பெருங் கவி சேக்ஸ்பியர் எழுதியுள்ள இன்பியல் நாடகங்களான 'விரும்பிய வண்ணமே ' (As YouLikeIt) 'நடு வேனிற்கனவு' (Mid Summer Nights' Dream) என்ற இரண்டிலும் சித்தரித்துக் காட்டப்படும் இயற்கை வாழ்வின் எழில் நலத்தைக் காண விரும்புவோர் தோடர் வாழும் தொட்டபெட்டாவிற்குச் சென்றால் காணலாம். புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவி, கவலையென்றால் என்னவென்று அறியாமல் இயற்கையோடு இயற்கையாக ஒன்றிவாழும் அவர் கள் வாழ் வைக்காண்போர், தாங்களும் இயற்கைவாழ் மக்களாக (Pastoral Nomads) ஏன் மாறிவிடக்கூடாது? என்று எண்ணாமல் இருக்கமாட்டார்கள். இலக்கிய உணர்வுடையோர் அங்குச் சென்றார்களானால், சங்க காலக் குறிஞ்சித்திணை அவர்கள் கண்முன் நிழலாடும்.

தோடர்கள் பெருமிதமும், அஞ்சாமையும், கவர்ச்சியூட்டும் உடற்கட்டும் வாய்க்கப்பெற்றவர்கள். வெள்ளையர்களிடம் அஞ்சாமையோடு உரையாடுவார்கள். ஆனால் சோம்பேறிகள், எருமை மேய்ப்பதைத் தவிர, வேறு எந்த வேலையும் செய்ய விரும்பாதவர்கள். நீலகிரி மலை தங்களுக்குப் பரம்பரை உரிமையுடையதென்று கருதுபவர்கள். முதலில் குடியேறியபோது, படகர்கள் இவர்களுக்கு அஞ்சியவர்களாகவே வாழ்ந்தனர். நிலங்களைப் பயிரிட்டு விளைந்த தானியத்தின் ஒரு பகுதியைக் கப்பம் வழங்குவதுபோல் தோடர்களுக்குப் படகர்கள் வழங்கிவந்தனர். இன்றும் அப்பழக்கம் இருந்து கொண்டு வருகிறது.

தோடர்களின் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இதற்குப் பலகாரணங்கள் உண்டு.