பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

களோடும், கிரேக்கர்களோடும் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர். நீண்ட மேலாடை போர்த்துக்கொண்டிருப்பதால் இவர்கள் ஈப்ரு (Hebrews) இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். சமவெளி மக்களால் துரத்தப்பட்டு, இம் மலைகளில் தஞ்சம் புகுந்த சிதியர் இனத்தாரே இவர்கள் என்று கூறுவோரும் உண்டு. தோடர்களின் சமயச் சடங்குகளில் பாடப்படும் பாடல்களை ஆராய்ந்த கிரேக்க நாட்டு ஆராய்ச்சியாளரான எச். எச், பிரின்ஸ் பீட்டர் (H. H. Prince Peter) என்பார், சுமேரியர்கள் வழிபட்ட கடவுளரின் பெயர்களும், அக் கடவுளர்களைப் பற்றிய செய்திகளும், இவர்களுடைய கடவுளர்களையும், செய்திகளையும் ஒத்திருக்கின்றன என்று கூறுகிறார். எனவே தோடர்கள் சுமேரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று அவர் எண்ணுகிறார்.

தோடர்குல ஆண்மகனின் சராசரி உயரம் 5 அடி 7 அங்குலம். பெண்களின் உயரம் 5 அடி 1 அங்குலம். சமவெளியிலுள்ள மக்களைவிட அழகிய நிறத்தைப் பெற்றிருக்கிறார்கள். வடித்தெடுத்த சிலை போன்ற உடற்கட்டுடையவர்கள். ஆண்கள் தலையில் அடர்த்தியான மயிரைப் பெற்றிருக்கின்றனர். பெண்கள் தங்களுடைய கூந்தலை வெண்ணெயிட்டு நீவி, உருண்டையான குச்சியில் சுருள்களாகச் சுற்றிப் பக்கங்களில் தொங்க விட்டிருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் மொத்தமான போர்வையொன்று மட்டும் போர்த்துக்கொண்டிருக்கின்றனர். அப் போர்வை வெண்மை நிறமானது. ஓரங்களில் சிவப்பும் நீலமும் கலந்த வண்ணக் கரைகளையுடையது. இப் போர்வையைப் 'புட்குலி' என்று கூறுகின்றனர். இப் போர்வையைக் கழுத்திலிருந்து பாதங்கள் வரையில் போர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் கோவணம் அணிகின்றனர்.