பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

கிறது. அவர்களுடைய மொழி 'துதம்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. திராவிட மொழியாராய்ச்சி வல்லுநரான கால்டுவெல் துரைமகனார், திருந்தாத திராவிட மொழிகளில் இதையும் சேர்த்திருக்கிறார். மற்ற திராவிட மொழிகளைவிடத் துதம் தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக மொழியாராய்ச்சி வல்லுநர்கள் கூறுகிறார்கள். இம் முடிவிலிருந்து ஓருண்மை மட்டும் புலனாகிறது. அதாவது தோடர்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதே. தோடர்களில் தார்த்தர் (Tarthar), தீவலி (Teivali) என்ற இரு பிரிவினர் உண்டு . இவர்கள் வெவ்வேறு காலங்களில் இங்குக் குடியேறியவர்கள்.

அன்றாட வேலை :

தோடர்கள் பயிர்த் தொழில் செய்வதில்லை. காலையில் எழுந்ததும், கட்டை விரல்களை மூக்கிற்கெதிரில் வைத்து, மற்ற விரல்களை அகல விரித்துப் பரிதி வணக்கம் செய்வார்கள். பிறகு எருமைத் தொழுவத்திற்குச் சென்று பால் கறப்பார்கள். முதல் நாள் பிரையிட்டு உறைந்த தயிரைக் கடைவார்கள். உணவு உண்டபின் எருமைகளை ஓட்டிக்கொண்டு செல்வார்கள். நாள் முழுவதும் எருமை மேய்த்துக்கொண்டு சோம்பலாகப் பொழுது போக்குவர். மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி அதை வணங்குவர். எருமைகளைத் தொழுவத்தில் அடைத்த பின் உண்டு உறங்குவர். பால் கறத்தல், எருமைகளைக் கண்காணித்தல் முதலிய பணிகளை ஆண்கள் மேற்கொள்வர். வீட்டு வேலைகளைப் பெண்கள் செய்வர்.

சமய வாழ்வு :

கதிரோன் வணக்கத்திலிருந்து, இவர்கள் இயற்கையைக் கடவுளாகக் கொள்ளும் வழக்கமுடையவர்கள் என்பது புலனாகிறது. அதோடு அவர்களுக்கே உரித்