பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தான வேறுபல கடவுள்களையும் வணங்குகின்றனர். தோடர்களின் வழிபாட்டிற்குரிய முக்கியமான கடவுள் ஆன் (On) ஆகும். ஆனின் தந்தை பிதி (Pithi). ஆனுக்கு ஒரு சோதரியும் உண்டு. அவள் பெயர் தீகிர்சி (Teikirzi). பிதி மிகவும் பழமையான கடவுள். பிதிதான் தோடர்களையும், அவர்களுடைய செல்வமான எருமைகளையும் படைத்தார் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் பிதி இப்போது இவ்வுலகில் இல்லையாம், இறந்தோர் வாழும் உலகின் தலைவராக இருக்கிறாராம். தோடர் இனத்தின் முதல் தோற்றத்தைப்பற்றி அவர்களிடையே ஒரு கதை வழங்குகிறது.

பிதியும் அவர் மனைவியும், ஒரு நாள் குந்தா மலையின் உச்சிக்குச் சென்றார்களாம். ஒரு நீண்ட இரும்புச் சட்டத்தை அவ்வுச்சியின் மேல் குறுக்காக வைத்து, அச்சட்டத்தின் ஒரு நுனியில் பிதியும், மற்றொரு நுனியில் அவர் மனைவியும் நின்று கொண்டார்களாம். பிதி அந்நுனியிலிருந்தவண்ணம் பூமியிலிருந்து 1800 எருமைகளை மேலே கொணர்ந்தாராம். பிதியின் மனைவி, மற்றொரு நுனியிலிருந்துகொண்டு 1600 எருமைகளைக் கொணர்ந்தாராம். பிதி கொண்டுவந்த எருமைகளே, இப்பொழுது தோடர்களிடையே உள்ள புனித எருமைகளின் (Sacredbuffaloes) முன்னோர்கள். பூமியிலிருந்து பிதியினால் கொண்டுவரப்பட்ட கடைசிப் புனித எருமையின் வாலைப் பிடித்துக்கொண்டு தோடர்களின் முன்னோன் வந்தான். அவன் தன் மார்பு எலும்புகளில் ஒன்றை எடுத்து, முதல் தோடர்குலப் பெண்ணை உருவாக்கினான். ஒருநாள் பிதியின் மகனான ஆன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டானாம். மகனின் பிரிவைத் தாளமுடியாத பிதி, தாமும் இறந்தோர் வாழும் உலகிற்குச் சென்று, அவ்வுலகின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அங்கேயே இருக்கிறாராம். பிதிக்குப் பிறகு அவர் மகளான தீகிர்சி தோடரைக் காக்கும் பணியை மேற்கொண்டு, அவர்களின் மதிப்பிற்