பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

குரிய கடவுளாக வீற்றிருக்கிறாள். உண்மையிலேயே இக்கதையும், இக் கதையில் வரும் கடவுளர் பெயர்களும் கிரேக்க, சுமேரிய பாணியிலேயே அமைந்துள்ளன. இக் கதையிலிருந்தும், இவர்களுடைய பழக்க வழக்கங்களிலிருந்தும், இவர்கள் தங்களுக்கென ஒரு தனிச் சமயத்தையும், கடவுளர்களையும் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

சில சமயங்களில் தோடர்கள் இந்து சமயக் கடவுளர்களையும் வழிபடுகின்றனர். இவர்கள் வணங்கும் இந்து சமயக் கடவுள்களில் குறிப்பிடத்தக்கது 'நஞ்சன்' என்பதாகும். பிள்ளைப்பேற்றுக்காக மட்டும், இக்கடவுளை வணங்குகின்றனர். புனித மந்தையின் குரு, மந்திரவாதி, மருத்துவன் ஆகிய ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கடவுளுண்டு. குருமார்களின் சடங்குகளில் கூறப்படும் மந்திரம் மலையாள மொழியிலேயே அமைந்துள்ளது.

கோயிலும் புனித மந்தையும் :

தோடர்களின் கோயில்கள் அவர்களுடைய குடிசைகளைப் போலவே காட்சியளிக்கின்றன. அவர்களுடைய குடிசைக் கூட்டத்திலிருந்து, சிறிது தூரத்தில் இக் கோயில்கள் அமைந்திருக்கின்றன. பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. தங்களைப் போலவே கடவுளும் எருமைகளை மேய்த்துக்கொண்டு மலையுச்சியில் வாழ்வதாகத் தோடர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் மனிதர்கள் கண்ணில் தென்படுவதில்லையாம். தங்கள் மந்தையிலிருந்து, கோயிலுக்குச் சில எருமைகளை விட்டுவிடுகிறார்கள். அவ்வாறு விடும் எருமைகளைப் 'புனித எருமைகள்' என்று அவர்கள் கூறுகிறார்கள், அவைகள் கடவுளுக்குச் சொந்த மானவை என்று கருதுகிறார்கள். இப்புனித எருமைகளைக் கண்காணிக்க ஒரு குரு அமர்த்தப்படுகிறான். அவனை எல்லாரும் பாலோல் (Palol) என்று அழைக்