பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

கோயிலில் உள்ள பாலோல் மிகவும் புனிதமானவனாகக் கருதப்படுகிறான். சந்தைக்குச் செல்லுவதும், பெண்ணோடு உடல்தொடர்பு கொள்வதும், பிறரோடு பழகுவதும் அவனால் விலக்கப்படுகின்றன. திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் பிறர் அவனை நெருங்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இக்கட்டுப்பாடுகளெல்லாம் இப்பொழுது தளர்ந்து வருகின்றன. ஒரு குரு புனித மந்தைகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாகச் சில சடங்குகள் நடத்தப்படுகின்றன. கோயிலுக்கென்று ஒதுக்கப்பட்ட புனித அருவியில் குளித்து, அதன் நீரை உட்கொள்வது அச்சடங்குகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

உணவு :

தோடர்கள் பொதுவாக மரக்கறி உணவே உண்கின்றனர். பாலும் தயிரும் அவர்களுடைய இன்றியமையாத உணவுப் பொருள்கள். சடங்குகளில் எருமைக் கன்றுகளைப் பலியிடும்போது மட்டும் அவற்றின் ஊனை உண்கின்றனர். வேட்டையில் மான் கிடைத்தால், அதையும் விருப்பத்தோடு உண்கின்றனர். மது அருந்துவதில், இவர்கள் பெரு விருப்பம் உடையவர்கள்.

பலியிடுதல் :

எருமைக் கன்றுகளைப் பலியிடுதல் இவர்களிடம் பெரு வழக்காகப் பரவியிருந்தது. கடவுளைத் திருப்திப் படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஒவ்வொரு மண்டுவிலும் ஓர் எருமைக் கன்றும், ஒவ்வொரு 'டி'யிலும் இரண்டு கன்றுகளும் பலியிடப்படுகின்றன. பலவித நுணுக்கமான சடங்குகள் அப்போது நடைபெறும். சடங்குகளெல்லாம் முடிந்தபிறகு பலியிடப்பட்ட கன்றின் ஊனை எல்லாரும் உண்பர். பாவங்களைப்