பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

நாயக்கர்'கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வய நாட்டிலும், குறிப்பாக மதுமலைப் பகுதியிலும் வாழ்கின்றனர்.

ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, பல்லவர் என்ற இனத்தார் தமிழகத்தைச் சிறப்பாக ஆண்டு வந்தனர். அவர்களுக்கும் குறும்பர்கள் என்ற வேறு பெயருண்டு. மாமல்லபுரம். சிற்றன்னவாசல், குடுமியான் மலை, நாமக்கல், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள குடைகோயில்களும், காஞ்சி நகரிலுள்ள பெருங்கோயில்களும் அவர்களுடைய, கலையையும் நாகரிகத்தையும் பறைசாற்றிய வண்ணம் இன்றும் காட்சியளிக்கின்றன. 10ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெருஞ்சோழ (Imperial Cholas)ரின் ஆட்சி தமிழகத்தில் ஓங்கியபோது, பல்லவர்களின் பேரரசு சிதைந்து, சோழப் பேரரசோடு ஒன்றிவிட்டது. சோழரிடம் தோல்வியுற்ற பல்லவர்கள், நீலகிரி மலையில் ஓடி ஒளிந்தனரென்றும், அவர் வழி வந்தோரே இன்றுள்ள குறும்பர் என்றும் சிலர் கருதுகின்றனர். இம்முடிவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனென்றால் பல்லவர்கள் நாகரிகமும், கலையுணர்வும் மிகுதியாகக் கொண்டவர்கள்; வட மொழியையோ, அதன் சார்பு மொழியையோ தாய்மொழியாகக் கொண்டவர்கள்; வடமொழிக் கலைகளை வளர்த்தவர்கள். ஆனால் நீலகிரிக் குறும்பர்கள் நாகரிகமும் கலையுணர்வும் அற்றவர்கள். திராவிட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். பல்லவர்கள் பொன்னிற மேனியும், அழகிய தோற்றமும் வாய்க்கப் பெற்றவர்கள். ஆனால் குறும்பர்களோ, கறுத்த உடலும், அழகற்ற தோற்றமும் கொண்டவர்கள். பல்லவர்கள் சோழ நாட்டை விட்டு வெளியேறிய காலம் பத்தாம் நூற்றாண்டு. தோடர்களின் வருகைக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்தே குறும்பர்கள்