பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11



குறிஞ்சிநிலக் கோதை கூறும் காதல் அனுபவம் உள்ளத்தைக் கொள்ளை இன்பத்தில் சாய்க்கிறது. பொய்யும் வழுவும், போட்டியும் பொறாமையும் மலிந்த இந்நாகரிகம் அழிந்து, இயற்கைநலம் திகழும் அவ்வெழில் வாழ்வு பூக்காதா? என்று உள்ளம் ஏக்கம் கொள்கிறது.

மேற்கூறியவாறு, பண்டைத் தமிழ் மக்கள் மலைவளத்தை அணு அணுவாகச் சுவைத்து இன்பமார்ந்தனர். இவ்வுண்மையை அறியாச் சிலர், வெள்ளையரைப் பார்த்துத்தான், நாம் மலைவாழ்வைக் கற்றுக் கொண்டோம் என்பது எவ்வளவு அறிவீனம்.

இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் பெறும் யானைக் கூட்டங்கள் தமிழகத்து மலைகளில் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. மெல்லியலாரின் விழியழகை வென்று, புள்ளிமான் கூட்டம் துள்ளி விளையாடுகின்றது. கன்னியரின் சாயலைக் கவர்ந்த வண்ணமயில்கள், தம் பன்னிறக் கலாபத்தை விரித்துக் காண்போரின் எண்ணத்தைக் கொள்ளை கொள்கின்றன. அருந்திக் களைதீர அருவிநீர்! குடைந்து விளையாடக் குளிர்ந்த சுனைநீர்! கொன்றை நிகர் கூந்தலில் சூடி மகிழக் கோட்டுப்பூ, கொடிப்பூ! ஆடி மகிழ அசைந்தாடும் ஊசல்! பாடிக்களி கொள்ளப் பாட்டமைந்த குறிஞ்சிப்பண்! உண்டு மகிழ உயர்ந்த கனி வகைகள்! நிலத்தில் கிழங்கு! இறைச்சி உணவுக்கு, வனத்தில் விலங்கு! காட்சிக்கு இயற்கை எழில்மிக்க நெடுவரை! காதல் மாட்சிக்குக் கனிமொழியார் ! குடித்து மகிழ, மலைச்சாரலில் வழியும் கொம்புத் தேன்! சுவைத்து மகிழப் பாவையரின் பலாச்சுளை உதடுகளில் வழியும் முத்தத்தேன்! இன்பமாக வாழ மனிதனுக்கு இன்னும் என்ன வேண்டும்? எனவேதான் பண்டைத் தமிழ் மக்கள் மலைவாழ்க்கையை விரும்பி ஏற்றனர்.