பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

மாப்பிள்ளை தேடவேண்டும். மறுமணத்திற்கு எந்த விதச் சடங்கும் கிடையாது. பெற்றோர் இசைவு கிடைத்தவுடன், தனிக் குடித்தனம் செய்ய வேண்டியது தான்.

இறுதிச் சடங்கு :

குறும்பர்களின் இறுதிச் சடங்குகளும் படகர்களின் சடங்குகளையே ஒத்திருக்கின்றன. இவர்களும் வீரராயப் பணத்தை இறப்பவன் வாயில் போட்டு நீர் ஊற்றுகின்றனர். தேரமைத்து அதில் பிணத்தைக் கிடத்தி இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லுகின்றனர். மிகவும் வயது முதிர்ந்தவர்களை எரித்துவிடுகின்றனர். மற்றவர்களை உட்கார்ந்த நிலையில் புதைத்து நடுகல் நாட்டுகின்றனர். ஏழாம் நாள் இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் இடுகாட்டிற்குச் செல்வர். ஒரு முதியவர் குழிபறித்து அதில் ஒரு புல்லை நடுவார். மூங்கிலினால் செய்த ஒரு கலத்தில் நீரை நிரப்பி, அதில் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விடுவார்கள். இவ்விரண்டு சொட்டு விளக்கெண்ணெயும் தொலைவில் விலகியிருந்தால், தீச்சகுனம் என்று கருதி, வேறு எந்தச் சடங்கும் செய்யமாட்டார்கள். ஒன்று சேர்ந்தால் நற்சகுனமாகக் கருதி, அந்நீரைக் கீழே கொட்டி விடுவார்கள். பிறகு புதுப்பானை ஒன்று வாங்கிப் 'பில்லாலா' கோயிலில் வைப்பார்கள், உறவினர்கள் யாரேனும் சமாதியைக் கடந்து செல்ல நேரிட்டால் வெற்றிலை, பாக்கு, புகையிலை முதலியவற்றை வைத்து வணங்கிவிட்டுச் செல்வர். இரண்டாண்டுகள் முடியும் வரை, மழை காலத்தில் சமாதியின் மேல் பந்தல் போடுவார்கள்!

பிற செய்திகள் :

குறும்பர்கள் கல்லாத்தா (பெண் தெய்வம்), ஐரு பில்லி, காடுபில்லாலா என்ற மூன்று தெய்வங்களை