பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175

குறைய 5000 வீடுகள் உள்ளன. இவ் வீடுகளெல்லாம் வண்ணம் பூசப்பட்டுப் பேரழகுடன் விளங்குகின்றன.

இந்நகரின் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருப்பதாலும், புதிய புதிய இல்லங்கள் தோன்றிக் கொண்டே இருப்பதாலும் நகரின் வசதிகளையும் பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கி. பி. 1826-ஆம் ஆண்டு , முதல் அஞ்சல் மனை {Post-office) தோற்று விக்கப்பட்டது. கி. பி. 1829-ஆம் ஆண்டு முதல் மருத்துவமனை கட்டப்பட்டது. கி. பி. 1863-ஆம் ஆண்டு நகராட்சி மன்றம் ஏற்படுத்தப்பட்டது. தண்டலர் அலுவலகம் கி. பி. 1866-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1878-ஆம் ஆண்டு 40,000 நூல்களடங்கிய ஒரு நூலகம் ஏற்படுத்தப்பட்டது. தென்னிந்தியாவிலுள்ள மிகவும் சிறந்த நூலகங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் அங்குச் சந்தை கூடுகிறது. உதகமண்டலத்தில் வாழும் ஆண்களும் பெண்களும் அங்குக் கூடி, ஒரு வாரத்திற்கு வேண்டிய பொருள்களை வாங்கிச் செல்லும் காட்சி உண்மையிலேயே உள்ளக் கிளர்ச்சியூட்டும் தன்மையது. 'சார்மிங் கிராஸ்' (Charming Cross) என்பது உதகமண்டலத்தின் நடுவிடம். அம்முனையில் நான்கு புறமும் பரவிச் சொரியும் செயற்கை நீர் ஊற்று (Flora Fountain) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கார்காலத்தில் அவ்வூற்று களிநடம் புரியும். அவ்விடத்தைச் சுற்றி அழகிய கடைகள் வரிசையாக உள்ளன.

மக்கள் தொகை பெருகியதும் பல கழகங்கள் தோன்றத் தொடங்கின. கி. பி. 1841-ஆம் ஆண்டு ஊட்டிக் கழகம் (Ooty Club) தோன்றியது. அதன் உறுப்பினர்களெல்லாம் வெள்ளையரே. தோட்ட முதலாளிகளுக்காகவே இக் கழகம் அமைக்கப்பட்டது.