பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

வேண்டும். உதகமண்டலத்தின் நடுவிலுள்ள சார்மிங் கிராஸிலிருந்து, தார் போடப்பட்ட பாதை கோதகிரிக்குச் செல்லுகிறது. அப்பாதையில் நான்கு கல் தொலைவு சென்று பிறகு 13-க்கல் மலைமீது ஏற வேண்டும். முதல் நான்கு கல் தூரமுள்ள பாதை வளைந்து வளைந்து செல்லுகிறது. வண்டியை ஓட்டிச் செல்லுவோர் மிகவும் எச்சரிக்கையோடு செல்ல வேண்டும்.

தொட்டபெட்டா உச்சியில் வானாய்வுக்கூடமொன்று கி. பி. 1846-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் கி. பி. 1859-இல் உதகமண்டலத்திற்கு ஒன்பது கல் தொலைவில் உள்ள இராணுவத்தாரின் தங்கல் இடமான வெல்லிங்டனுக்கு இது மாற்றப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் தொட்டபெட்டாவிற்கே மாற்றப்பட்டது. ஆனால் இது இப்பொழுது பயன்படும் நிலையில் இல்லை. தொட்டபெட்டாவின் உச்சியிலிருந்து காண்போர் கண்களுக்கு உதகமண்டலத்தின் முழுக் காட்சியும் பேரழகோடு தென்படும். அதோடு கோவை மாவட்டத்திலுள்ள எல்லா மலைகளும் தென்படும்.

பனிவீழ் சிகரம் :

தொட்டபெட்டாவிற்கு அடுத்தாற்போல் மிகவும் உயரிய சிகரம் பனிவீழ்சிகரம் (Snow down} என்பதாகும். இதன் உயரம் 8,299 அடி. தொட்டபெட்டாவைப்போல் எளிதாக இதன்மீது ஏற முடியாது. ஏறுவதற்குத் தொல்லையாக இருந்தாலும், உயர்ந்த மரங்களடர்ந்த வழிகளூடே ஏறிச் செல்லும்போது உள்ளத்திற்கு இன்பமாக இருக்கும். ஸ்பென்சர் மலை மீது அமைந்துள்ள செயிண்ட் ஸ்டீஃபன் சர்ச்சிற்குப் பின்னால் இருக்கும் மெர்லிமண்ட் பாதையில் இரண்டு கல் தொலைவு சென்றால், இவ்வுச்சியை அடையலாம். இவ்வழியும் மரங்களடர்ந்தது.