பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

மூக்கறுத்தி சிகரம் :

மூக்கறுத்தி சிகரம் (Mukerti Peak) தோடர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இச்சிகரத்திற்கு அப்பால் சுவர்க்கத்தின் வாயில் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். இச் சிகரத்தோடு தொடர்புடைய இரண்டு கதைகள் தோடர்களிடையே வழங்குகின்றன. தோடர்களிடையே பெண் குழந்தைகளைக் கொலை செய்யும் பழக்கம் இருந்ததாகக் குறிப்பிட்டோம். கொலை செய்ய வேண்டிய குழந்தைகளை இங்குக் கொணர்ந்து எறிந்து கொன்று விடுவதுண்டாம், ஆகையினால் எந்தப் பெண்ணையும் தோடர்கள் இச்சிகரத்தின் பக்கமாகச் செல்ல விடுவதில்லை. இக் கட்டுப்பாட்டை மீறி ஒரு பெண் இங்கு வந்துவிட்டாளாம். இதையறிந்த தோடர்கள், அப் பெண்ணின் மூக்கை அறுத்துத் தண்டித்தார்களாம். தண்டனை பெற்ற அப் பெண் எப்படியோ இம்மலைச் சிகரத்தை அடைந்து மறைந்துவிட்டடாளாம். இன்றுகூட அப் பெண்ணை ஒரு சிறு தெய்வமாகத் தோடர்கள் வணங்கு கின்றனர்.

இச் சிகரத்தோடு தொடர்புடைய மற்றொரு கதை இராவணனைப் பற்றியதாகும். தோடர்கள் இராவணனுக்கு மரியாதை காட்டாமல், இராமனிடத்தில் அதிக அன்பு செலுத்தினார்களாம். அதனால் சினங்கொண்ட இலங்கை மன்னன் ஒரு கை மண்ணை எடுத்துக் காற்றில் வீசினானாம். அம்மண் கொடிய கிருமிகளாக மாறித் தோடர்களுடைய கால்நடைகளையும், வீடுகளையும் பீடித்துத் துன்புறுத்தியதோடு, அவர்களையும் நோய் கொள்ளுமாறு செய்து கொடுமை புரிந்ததாம். இன்றுகூட அக்கிருமிகளால் துன்புறுவதாகத் தோடர்கள் நம்புகிறார்கள். இதை உணர்ந்த இராமன் இச்செயலுக்குப் பழிவாங்க எண்ணி இராவணன் தங்கையான சூர்ப்பநகையின் மூக்கை அறுத்து,