பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. சேர்வராயன் மலை
பெயர்க்காரணம்

‘சைலம்’ என்ற வட சொல்லுக்கு மலை என்பது பொருள். விட்டுவிட்டுச் சிதறிக் கிடக்கும் மலைத் தொடரின் பகுதிகள் சேலம் மாவட்டத்தில் நிறைந்திருக்கின்றன. கொல்லி மலைகள், கல்ராயன் மலைகள், சேர்வராயன் மலைகள், பச்சை மலைகள், கஞ்சமலை, போதமலை என்பன அவைகளில் குறிப்பிடத் தக்கவை. இவ்வாறு மலைநாடாக விளங்குவதாலேயே, சைலம் என்ற சொல் மருவி சேலம் என்றாயிற்று என்பர் சிலர். இச்சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாகும். கொங்கு நாடு சேரநாட்டிற்கும், சோழநாட்டிற்கும் நடு எல்லை. சேர சோழ மன்னர்களில் யார் வலிமை ஓங்குகிறதோ, அவர் கைக்கு மாறி மாறி ஊசலாடிக்கொண்டிருந்தது இக்கொங்குநாடு. இருந்தாலும் சோழரைவிடச் சேர மன்னர்களும், அவர் வழி வந்த அதியர் குடியினருமே நெடுங்காலம் இங்கு அரசோச்சி வந்தனர். ‘பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் தன்னகத்தடக்கிச் சாதல் நீங்க’ ஔவைக் களித்துப் பெரும்புகழ் கொண்டவனும், கடையேழு வள்ளல்களில் ஒருவனுமாகிய அதிகமான் வாழ்ந்த தகடூர் நாடு, சேலம் மாவட்டத்துத் தருமபுரிக் கோட்டமாகும். அங்கு இன்றுள்ள ‘அதமங் கோட்டை’யே பண்டைய கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதிகமான் வாழ்ந்த ‘அதிகன் கோட்டை’ யாகும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தமிழகத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களில் தலை சிறந்தவரும், அதிகமானால் பெரிதும் பாராட்டிப் போற்றப்பட்டவரு