பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

படும் மரங்கள், முட்செடிகள், ஆண்டு முழுதும் பயன் தரத்தக்க மரங்கள், கிழங்குச் செடிகள், வேலி அமைப்பதற்குப் பயன்படும் படியான செடிகள், மூலிகைச் செடிகள், நீர்ச் செடிகள், மணப்பொருள் செய்யப்பயன்படும் செடிகள், அழகு வளைவுகளில் படரவிடும் கொடிகள், ரோஜாச் செடிகள் என அளவற்ற தாவர வகைகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

பூக் கண்காட்சி :

ஆண்டு தோறும் மேத் திங்களில் இங்கு நடை பெறும் பூக் கண்காட்சி (Flower Show) மிகவும் குறிப்பிடத்தக்கது. அக் கண்காட்சியில் பூவோடு காய்கறி, பழம் முதலியனவும் வைக்கப்படுகின்றன, நீலகிரி மலையின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், சமவெளியிலிருந்தும் மக்கள் அக்கண்காட்சியில் வந்து கூடுகின்றனர். நாகரிக மக்களும், பழங்குடி மக்களும் ஒன்றுசேர இவ்விழா பெரிதும் துணைபுரிகின்றது. நாகரிகர் பழங்குடி மக்களையும், பழங்குடி மக்கள் நாகரிகரையும் அங்காந்த வாயோடு பார்த்து வியப்படைவர். பூக் கண்காட்சி நடைபெறும் அந் நாளிலேயே பறவைகளின் கண்காட்சி (Poultry Show) ஒன்றும் நடைபெறும். நாய்க் கண்காட்சிக்காக ஒரு நாள் அப்போது ஒதுக்கப்படுகிறது. உதகமண்டலத்தில் பல நாய் வளர்ப்பு நிலையங்கள் உள்ளன: அவ்விடங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் காட்சிக்காக நிறைய நாய்கள் அங்கு வந்து கூடும். உயர்ந்த இன நாய்களில் சிறப்பானவற்றையெல்லாம் அங்குக் காணலாம். பூனைக்குட்டி அளவிலிருந்து கன்றுக் குட்டியின் அளவு வரையுள்ள நாய்கள் அங்கு அணி அணியாக இருக்கும்.

வன விலங்குகளைக் காண விரும்புவோர், கூடலூருக்கு அப்பால் உள்ள காடுகளுக்குச் செல்லுகின்றனர். ஊட்டியிலிருந்து நாற்பது கல்லுக்கு அப்பால் தான் வனவிலங்குகளைக் காண இயலும். மாலையில்