பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189

புறப்பட்டு, சூரியன் மலைவாயில் விழுந்ததும் யானை மேல் ஏறிக் காட்டிற்குள் நுழைந்தால், காட்டு விலங்குகளின் கூட்டத்தைக் காணலாம். புலி, காட்டெருமை, மானினம் ஆகியவை எதிர்ப்படும்.

பள்ளிகள் :

உதகமண்டலத்தில் மாணவர்கள் தங்கிப் பயிலுவதற்கேற்ற நான்கு பள்ளிகள் (boarding schools) உள்ளன. பிரீக்ஸ் நினைவுப்பள்ளி (Breek's Memorial School), திருச்சபை மகளிர் உயர் நிலைப்பள்ளி (High School for Sisters of the Church), நாசரேத்து மகளிர் பள்ளி (The Nazareth Convent), லாரன்ஸ் பள்ளி (The Lawrence School) என்பன அவை. மேற்கூறிய நான்கு பள்ளிகளில் மிகவும் சிறப்பானது வாரன்ஸ் பள்ளி. இது உதகமண்டலத்திலிருந்து நான்கு கல் தொலைவில் லவ்டேல் (Lovedale) என்ற இடத்தில் அமைந்துள்ளது. 'லவ்டேல்' என்றால் அன்புப் பள்ளத்தாக்கு' என்று பெயர். அன்பால் பிணிக்கப்பட்டுப் பல்கலை பயிலும் பிஞ்சுள்ளங்களின் கலைக் கூடம் அமைந்திருக்குமிடத்திற்கு இப்பெயர் மிகவும் பொருத்தமே. இவ்விடத்தின் தட்ப வெப்ப நிலை உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது.

இப்பள்ளி கி. பி. 1858-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 6-ஆம் நாள் துவக்கப்பட்டது. அப்போது இந்திய நாட்டுப் படையின் தளபதி (Major General) யாக விளங்கிய சர் ஹென்றி லாரன்ஸ் என்பாரின் பெயர் கொண்டு இப்பள்ளி விளங்குகிறது. இந்தியப் படையில் பணியாற்றிய படைவீரர்கள், ஓய்வுபெற்ற படைவீரர்கள், ஆகியோரின் குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி பயிலுவதற்காக, நீலகிரி மலையில் உயரிய ஒரு பள்ளியை நிறுவ வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாக வெளியிட்டவர் அவரே. கி. பி. 1949-ஆம் ஆண்டு வரையில், படையினர்